பலத்த மழை காரணமாக மஞ்சூர் கிண்ணக்கொரை சாலை துண்டிப்பு: மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைப்பு பணி தீவிரம்

மஞ்சூர்: பலத்த மழையால் மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் ஒரு பகுதி துண்டிக்கப் பட்டது. அப்பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.  நேற்று முன்தினம் மாலை மழை காரணமாக மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் தாய்சோலை, கேரிங்டன் உள்பட பல்வேறு இடங்களில் சாலையோர ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தன. கேரிங்டன் ஜெயில்தோட்டம் பிரிவு அருகே ராட்சத மரம் சாய்ந்ததில் சாலையின் ஒரு பகுதி பெயர்ந்து மேலிருந்து கீழ்புறம் உள்ள ரோட்டில் விழுந்தது. பெருமளவு மண் குவியலோடு மரங்கள் விழுந்து சாலையை மூடியது. இதனால் மஞ்சூரில் இருந்து எல்லையோர கிராமங்களான கிண்ணக்கொரை, இரியசீகை உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது.

 

மஞ்சூரில் இருந்து சென்ற 2 அரசு பஸ்கள் கடந்த 2 நாட்களாக கிண்ணக்கொரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் விஸ்வநாதன், உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன், குந்தா கோட்ட உதவி பொறியாளர் பாலச்சந்தர் மற்றும் சாலை ஆய்வாளர் நஞ்சூண்டன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு சீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்கள். சாலை பணியாளர்களுடன் மஞ்சூரில் இருந்து ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சாலையில் விழுந்த மண் சரிவுகள் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டு கார், ஜீப் போன்ற சிறிய வாகனங்கள் செல்லும் வகையில் சாலை சீரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சாலை துண்டிப்பு ஏற்பட்ட பகுதியில் மேலும் மண் சரிவுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 500 மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. இப்பணிகள் முடிந்தவுடன் மஞ்சூர்-கிண்ணக்கொரை இடையே மீண்டும் அரசு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்படும்.

இந்நிலையில், நேற்று காலை மஞ்சூர் பழைய தாலுகா அலுவலகம் அருகே ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் மஞ்சூர்-ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் சாலையின் இரு புறங்களிலும் அணிவகுத்து நின்றது.

இதைத்தொடர்ந்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதேபோல் நேற்று பகல் 1 மணி அளவில், மஞ்சூர்-கோவை சாலையில் பெரும்பள்ளம் என்ற இடத்தில் மண் சரிந்து பாறைகள் ரோட்டில் உருண்டு விழுந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி உதவியுடன், மண்சரிவை அகற்றி, பாறைகளை அப்புறப்படுத்தினர். இதனால், இந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: