பாழாகிப்போன சிங்காநல்லூர் படகுத்துறை: மூழ்கிப்போனது பல லட்சம் அரசுப்பணம்

கோவை: கோவை சிங்காநல்லூர் படகுத்துறை 17 ஆண்டாக பயன்பாடின்றி முடங்கி கிடக்கிறது. மாநகராட்சி பணம் பல லட்சம் ரூபாய் வீணாகியுள்ளது. சுற்றுலா அனுபவிக்க முடியாமல் மாநகர மக்கள் அவதியடைந்துள்ளனர். கோவை நகரில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று சிங்காநல்லூர் குளம். தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள பெரிய  ஏரிகளுள் இதுவும் ஒன்று. சுமார் 288 ஏக்கர் பரப்பளவில் சோழர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்த குளம், கோவையின் சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு, நீர் காக்கை,  நாமக்கோழி  போன்ற பறவைகள் காணப்படுகின்றன. அக்டோபர் மாதத்தில் கூழைக்கடா  பறவைகளும் வருகின்றன. 110-க்கும் அதிகமான பறவையினங்கள் இங்கு காணப்பட்டதாக பதிவு  செய்யப்பட்டுள்ளது.

இந்த குளம் அமைந்துள்ள பகுதியில் தாவரங்கள், பறவைகள் உள்ளிட்ட  720 வகையான பல்லுயிர்கள் நிறைந்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, 396 வகை  தாவரங்கள், 160 வகையான பறவைகள், 62 வகையான பட்டாம்பூச்சிகள், 22 வகையான பாலூட்டிகள்  என பல்வேறு உயிரினங்கள் இந்த குளத்தை நம்பி உயிர் வாழ்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மிக முக்கியமாக 200 வகையான மூலிகை செடிகள்,  வெளிநாட்டு பறவையினங்கள் ஆகியவற்றுக்கு, சிங்காநல்லூர் குளம் அடைக்கலம் கொடுக்கும்  பூமியாக உள்ளது. பல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியாக திகழும் சிங்காநல்லூர் குளம்,  தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. நொய்யல்  ஆறு, இதன் நீராதாரமாக விளங்குகிறது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை இக்குளத்தை  ஒட்டிச் செல்கிறது. மேலும், போத்தனூர்-இருகூர் இருப்புப்பாதை இக்குளத்தின் நடுவில்  செல்கிறது. இக்குளத்தில், மழைநீர் நிறைந்திருக்கும் நாட்களில் மீன் பிடித்தல்  நடக்கிறது.  

சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, கோவை மாநகராட்சி சார்பில் கடந்த 2002ம் ஆண்டில் இங்கு முதல் முறையாக படகுத்துறை அமைக்கப்பட்டது. அழகான பூங்கா, நீரூற்று, குழந்தைகள் விளையாட்டு மைதானம் என பல்வேறு வசதிகளுடன் படகுத்துறை அமைக்கப்பட்டது. படகு சவாரி துவங்கிய சில நாட்களில், படகுத்துறை மூடப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவில் அமைந்த இந்த படகுத்துறையை திடீரென மூடியதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். குளத்தில் முழு அளவில் சாக்கடை நீர் தேங்கியதால் துர்நாற்றம் வீசுவதாலும், ஆகாய தாமரைகள் படர்ந்து விட்டதாலும் படகு சவாரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது என மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.    மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்து, மீண்டும் மிதி படகு, மோட்டார் படகு என நடவடிக்கையை தொடர மாநகராட்சி அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.

 

சாக்கடை நீரை நம்பி, பணத்தை கொட்டிய மாநகராட்சி நிர்வாகம், படகுத்துறையை மேம்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. சமூக ஆர்வலர்களின் தொடர் கோரிக்கைக்கு பிறகு, கடந்த 2015ம் ஆண்டில், 29 லட்சம் ரூபாய்  செலவில் குளத்தை சீரமைத்து, மீண்டம் படகு சவாரி துவக்க திட்டமிடப்பட்டது.  ஆனால், இந்த பணத்தை, ஆகாய தாமரை அகற்ற செலவிட்டதால், படகு சவாரி திட்டம்  மீண்டும் முடக்கப்பட்டது.

இப்படகுத்துறை கடந்த 17 ஆண்டாக மூடிக்கிடக்கிறது. இங்கு, பகல் நேரத்தில் விபச்சார கும்பல் சல்லாப லீலைகளில் ஈடுபட்டு வருகிறது. போதை கும்பல் நடமாட்டமும் அதிகமாகி விட்டது. படகுத்துறை மூடப்பட்ட பின், சிங்காநல்லூர் குளம் ஆபத்தான பகுதியாக மாறிவிட்டது. குளத்தின் மறைவான பகுதியில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களும் நடக்கிறது. இதை தடுக்கும் வகையில், குளக்கரையில் வேலி போடப்பட்டுள்ளது.

இதுபற்றி பொதுப்பணித்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கோவை நகரில் உள்ள குளங்களில் மாசு நீர் அதிகமாக இருப்பது இந்த குளத்தில்தான். இங்கே வளரும் மீன்களில் சாக்கடை நாற்றம் வீசுகிறது. இங்குள்ள மீன்களை சாப்பிட்டால் உடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலையிருக்கிறது. சங்கனூர் பள்ளத்தில் வரும் முழு சாக்கடை கழிவுகளும் இந்த குளத்தில்தான் விடப்படுகிறது.  இதை சுத்திகரிக்காமல் படகுத்துறையை மீண்டும் செயல்படுத்த முடியாது. சில ஆண்டிற்கு முன், வேதிப்பொருட்களை நீரில் கலந்து சுத்தம் செய்யும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது தோல்வியில் முடிந்துவிட்டது. இக்குளக்கரை 3.1 கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. 19.70 அடி ஆழத்திற்கு நீர் தேக்க முடியும். கடந்த 2009ம் ஆண்டில், இக்குளத்தை சீரமைக்க 99 ஆண்டு குத்தகை அடிப்படையில், பொதுப்பணி துறையிடமிருந்து, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இதுவரை குளம் சீரமைப்பு பணி நடக்கவில்லை.   இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: அரிய வகை ஆமைகள் சிங்காநல்லூர் குளத்தில் இருக்கிறது. இக்குளம், நகர் பகுதியில் உள்ள கடைசி குளமாக இருந்தாலும் நொய்யல் ஆற்று நீர் முழுமையாக இந்த குளத்திற்கு வருவதில்லை. நொய்யல் ஆற்று நீர் வரும் வாய்க்கால்கள் அடைக்கப்பட்டுள்ளது. இக்குளம் சீரமைக்கப்பட்டால் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 10 கி.மீ பரப்பிற்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும்.  குளத்தில் சாக்கடை நீர் ேதங்குவதால் சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகளின் ஆழ்குழாய் கிணறுகளில் மாசுபடிந்த நீர் வருகிறது. சிங்காநல்லூர் குளம் மட்டுமின்றி, சாக்கடை கழிவுகளை சுமந்து வரும் சங்கனூர் பள்ளத்தையும் சீரமைக்கவேண்டும். இதற்கு பெரும் தொகை தேவைப்படுவதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குளக்கரையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘’கோவை  நகரில் 3 குளங்களில் ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. நான்காவதாக குறிச்சி குளம், ஐந்தாவதாக சிங்காநல்லூர் குளம் ஆகியவற்றிலும் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளது. உக்கடம் பெரிய குளத்தில் ஆகாய தாமரை இல்லாத காரணத்தால், இங்கு படகுத்துறை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிங்காநல்லூர் குளத்தின் படகுத்துறை விரைவில் மேம்படுத்தப்படும்’’ என்றனர்.

Related Stories: