குமரி வனப்பகுதியில் அதிகரிக்கும் கடத்தல் கொள்ளை போகும் விலை உயர்ந்த மரங்கள்: சோதனைச்சாவடிகள் பலப்படுத்தப்படுமா?

குலசேகரம்: தமிழகத்தில் வளம் மிகுந்த மாவட்டம் குமரி மாவட்டம். மேற்குதொடர்ச்சி மலை குமரியில் துவங்குகிறது. இது குமரி மாவட்டத்திற்கு அரணாக விளங்குகிறது. மேலும் சிறியது, பெரியது என ஏராளமான மலைகுன்றுகள் அமைந்துள்ளன. மேடு, பள்ளம் என கரடுமுரடான நில அமைப்பை கொண்ட இந்த மாவட்டத்தின் பெரும்பகுதி காடுகள் மற்றும் மலைகளாகவே உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள காடுகள், அடர்ந்த வன பகுதிகளாக உள்ளதோடு பல்லுயிரின வாழ்விடமாகவும் உள்ளது. இந்த வன பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என அறிவிக்கப்பட்டு வன உயிரின சரணாலயமாக உள்ளது. ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 130 சதுர ஹெக்டேர் பரப்பளவுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆயிரத்து 489 சதுர ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. இது மொத்த பரப்பில் 30.2 சதவிகிதமாகும்.

இந்த அடர்த்தியான வனப்பகுதியில் தேக்கு, ஈட்டி, சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள், அரியவகை உயிரினங்கள், மூலிகைகள் ஏராளம் உள்ளது. வனபகுதி முழுவதும் நீரோடைகள் இரத்த நாளங்கள் போன்று பாய்ந்து செல்வதால் எப்போதும் பசுமையாக உள்ளது. இயற்கையின் கொடையாக உள்ள இந்த மலைகள் மற்றும் காடுகளினால் கன்னியாகுமரிமாவட்டம் பசுமை மாறா மாவட்டமாக திகழ்வதுடன் அதிக மழை பொழிவையும் பெற்று வருகிறது. தற்போது கன்னியாகுமரி மாவட்ட வனபகுதிகள் முண்டன்துறை புலிகள் சரணாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. பல் உயிரின சரணாலயமாக குமரி மாவட்ட காடுகள் உள்ளதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏராளமான பகுதிகளை சூழியல் அதிர்வு மண்டலமாக அறிவிப்பதற்கான முற்சிகள் நடைபெற்று வருகிறது. மக்கள் வாழ்விடங்கள் இந்த எல்லைக்குள் வருவதால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காடுகளின் பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் பல ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் தனியார் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காடுகளின் பரப்பை அதிகரிக்கவும் வன உயிரினங்களின் பாதுகாப்பிற்காகவும் பொதுமக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் வனதுறை, இருக்கின்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை முறையாக பாதுகாப்பதில் கோட்டை விடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீசிய ஓகி புயலில் பல லட்சம் மரங்கள் சரிந்து விழுந்தன. வனப் பகுதிகளுக்குள் விழுந்த மரங்கள், காடுகளின் பாதுகாப்பு கருதி அகற்றப்படாமல் அப்படியே விடப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் செடி, கொடிகள் வளர்ந்து அடர்த்தியாகி, விழுந்து கிடக்கும் மரங்கள் வெளியே தெரியாதவண்ணம் காடுகள் அடர்த்தி மிகுந்ததாக மாறியது. இது மரம் கடத்தல் கும்பல்களின் கண்களை உறுத்தியது. இதன் விளைவால் குமரியின் அடர்ந்த வன பகுதிகளான பெருஞ்சாணி, காயல்கரை, செல்லம்திருத்தி, தடிக்காரன்கோணம் போன்ற பகுதிகளில் காடுகளுக்குள் புகுந்த கடத்தல் கும்பல் நீண்ட நாட்களாக முகாமிட்டு தேக்கு, ஈட்டி போன்ற விலை உயர்ந்த மரங்களை வெட்டி லாரிகளில் கடத்தி வந்துள்ளது. நாளடைவில் நூற்றாண்டுகளை கடந்த பல விலை உயர்ந்த மரங்களையும் இந்த கும்பல் வெட்டி கடத்தியதால் வன பகுதியில் பல இடங்கள் காடுகள் அழிந்து புதர்கள் மட்டும் மண்டிய நிலையிலுள்ளது. நீண்ட நாட்களாக இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்று வந்தும் காடுகளை கண்காணிக்க வேண்டிய வனத்துறையின் கண்களில் படாதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக அரசியல் பின்பலத்துடனும் வனதுறையிலுள்ள சிலரின் உதவியுடனும் மரங்கள் கடத்தப்படுவதாக மொட்டை பெட்டிசன்கள் உயர் அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக சென்றன, இதையடுத்து களத்தில் இறங்கிய வனத்துறையினருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. காணாமல் போன மரங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சிலநாட்கள் பெயரளவில் ஆய்வுகள் மேற்கொண்டதோடு கடத்தல்காரர்கள் விட்டுச்சென்ற மரங்களின் கிளைகளை மீட்டு சென்றனர். மேலும் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பைக்குகளை பறிமுதல் செய்ததோடு மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் இல்லாமல் மூடி மறைக்கப்பட்டு வருகிறது.

காடுகளை பாதுகாக்க வேண்டும், காட்டின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களின் வாழ்வாதாரங்கள், வாழ்விடங்களில் கைவைக்கும் வனத்துறை முதலில் பாதுகாக்கப்பட்ட வனபகுதியாக உள்ள காடுகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். காட்டுக்குள் புதிது புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளை மூடவேண்டும். தேவையான இடங்கில் கண்காணிப்பு கேமாரக்களை நிறுவி பாதுகாப்பை காட்டின் உறுதி செய்யவேண்டும். வனதுறையிலுள்ள கறுப்பு ஆடுகளை களைய வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

Related Stories: