அதிகாரிகள் பாராமுகம் நெல்லையை மீண்டும் மிரட்டும் கேரள மருத்துவக்கழிவுகள்

செங்கோட்டை: தமிழகத்தை குப்பைக்கிடங்காக மாற்றும் கேரள கழிவுகளால் சுகாதார  கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகம் - கேரள எல்லையில் அமைந்துள்ளது நெல்லை மாவட்டம் செங்கோட்டை. இதனருகே உள்ள புளியரை சோதனைச் சாவடி வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான  வாகனங்களில்   உணவுப்பொருட்கள், காய்கறி, அரிசி, முட்டை, கட்டுமானப் பொருட்கள், உற்பத்தி பொருட்கள்  உட்பட அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து திரும்பும் வாகனங்களில் தமிழகத்திற்கு பலதரப்பட்ட கழிவுப்பொருட்களை  கொண்டுவந்து  தமிழக சாலையோரங்களில் கொட்டி விடுகின்றனர். சோதனைச் சாவடியில் இருக்கும் அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை.

கடந்தாண்டு டிச.20ம் தேதி கடையநல்லூர் அருகே கேரளாவில் இருந்து  வந்த லாரியை சோதனை செய்தபோது அதில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும்  மருத்துவ கழிவுகள் கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. கழிவுகளை  ஏற்றி வந்த 28 லாரிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார்   மடக்கிப் பிடித்தனர். அந்த லாரிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம்  வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறிது காலம் கழிவுகள் வருவது நின்றது. தற்போது மீண்டும் கழிவு லாரிகள் தமிழகத்திற்கு வரத் துவங்கியுள்ளது.

கடந்த வாரம் செங்கோட்டை- தென்காசி  சாலையில் இலஞ்சி அருகே உள்ள கொட்டாகுளம் பெரிய குளத்தில் சாலையோரத்தில்   மருத்துவக் கழிவுகள், ரசாயன கழிவுகள்  மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டப்பட்டு கிடந்தன.  கட்டப்பட்ட நிலையில் இருந்த அந்த கழிவுகளில் ஒரு மூடை உடைந்திருந்ததால் குளுக்கோஸ் ஏற்றிய  டியூப்கள் உட்பட மருத்துவக் கழிவுகள் இருந்தன. சுகாதாரத்துறை அதிகாரிகள்  இதை அப்புறப்படுத்தினர். இதுபோல கழிவுகள் மூட்டை மூட்டையாக செங்கோட்டையில்  இருந்து சுரண்டை செல்லும் சாலையிலும், தென்காசியிலிருந்து பண்பொழி   செல்லும் சாலையிலும் கொட்டப்பட்டுள்ளன.

மருத்துவ கழிவுகளா?  ரசாயன கழிவுகளா? என தெரியாமலேயே மூட்டை குவியல்கள் ஆங்காங்கே உள்ளன. இதனால் கழிவுகள் கொட்டப்படும்  பகுதிகளில்  துர்நாற்றம் வீசுவதுடன், அந்த கழிவுகளை, தெருநாய்களும்,  காகங்களும் ரோடு முழுக்க இழுத்து சிதறடித்து விடுகின்றன. இதனால், துர்நாற்றம்  ஏற்பட்டு, மக்களின் சுகாதாரம் பாதிக்கிறது. இந்த கழிவுகளால் விவசாயத்திற்கு  பெயர் பெற்ற செங்கோட்டை தாலுகா சுகாதார சீர்கேடுக்கு உள்ளாகி  துர்நாற்றமடிக்கும் பகுதியாக  மாறிவருகிறது. இதுகுறித்து செங்கோ ட்டை பகவதிபுரம் கூட்டுறவு சங்கத்தலைவர் ரவிசங்கர் கூறுகையில்,  ‘புளியரை- செங்கோட்டை  சாலையோரங்களில் இறைச்சி கழிவுகளையும், மருத்துவ  கழிவுகளையும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில், வீசிச்செல்கின்றனர்.

இறைச்சிக்கழிவுகள் குவிந்து கிடப்பதை ஊரக  வளர்ச்சித்துறையினர் மற்றும் சுகாதார  அதிகாரிகள் வேடிக்கை பார்த்து விட்டு பின்னரே அப்புறப்படுத்துகின்றனர். எனவே கழிவுகளை தமிழகத்தில் ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து டிரைவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இதற்காக புளியரையில்  சுகாதாரத்துறை சார்பில் அதிகாரிகளை நியமித்து ஒரு சோதனைச் சாவடியை அமைத்தால் இதுபோன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க முடியும். சுகாதாரத்துறை தனி சோதனைச்சாவடி அமைப்பது தான் நிரந்தர தீர்வாகும், என்றார். கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் எல்லையோர பகுதிகளில் குப்பைகள் மற்றும் மருத்துவக்   கழிவுகள் கொட்டப்படுவது குறித்து நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் இணை   இயக்குநர் கிருஷ்ணனிடம் கேட்ட போது, மருத்துவக்கழிவுகளை அழிப்பதற்கு   தனியான விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த கழிவுகளை   சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளிலேயே அவர்கள் பெற்று செல்லும் நடைமுறையும்   உள்ளது. கேரளாவில் இருந்தோ, வேறு வகையிலோ பொது இடத்தில் மருத்துவ கழிவுகள்   கொட்டப்பட்டால் முதலில் சம்பந்தப்பட்ட சுகாதார பணியாளர்   சென்று பார்வையிடுவார். பின்னர் உயர் அலுவலர்களும் ஆய்வு செய்து உடனடியாக   சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் மற்றும் சிறை தண்டனை   கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது.

வெளி மாநிலங்களில்  இருந்து  கழிவுகள் லாரி போன்ற வாகனங்களில் வருவதென்றால் எல்லையில் உள்ள  வாகன சோதனை  சாவடியில் ஆய்வு செய்து வழக்கு பதிந்து திருப்பி  அனுப்ப வேண்டும்.  அவ்வாறு பலமுறை நடந்திருக்கிறது. மருத்துவம் அல்லாத  கால்நடை கழிவுகள்  போன்ற பிற கழிவுகளை எல்லை தாண்டி கொண்டுவந்து  கொட்டுவதும் சட்டப்படி  குற்றமே, என்றார்.கேரளாவில்  சுற்றுச்சூழலையும்  சுற்றுலாவையும் பேணிக்காக்கும் பொருட்டு, மட்காத  குப்பைகள்,  இறைச்சி,  மின்னணு, மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில்  கொட்டுவது தடை  செய்யப்பட்டுள்ளது. மீறிக்கொட்டினால் அபராதம்  விதிக்கப்படுவதோடு, வாகனம்  பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் தான் கழிவுகளை லாரிகளில் ஏற்றிவந்து,  தமிழக எல்லைக்குள் கொட்டி விடுகின்றனர். இதை சாதாரணமாக பார்க்காமல் தமிழக அரசும், சுகாதாரத் துறையும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழகம் கேரளத்தில் குப்பை கிடங்காக மாறுவது தடுக்கப்படும்.

Related Stories: