ஈரோடு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபரின் 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஈரோடு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு மகளிர் நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரி. இவருக்கு 13 வயதில் மகள் இருக்கிறார். கடந்த 2016 மே மாதம் 27ம் தேதி அந்த சிறுமி தெருவில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பிரகாஷ் என்ற வாலிபர் அந்த சிறுமியை தனது வீட்டுக்கு தூக்கிச்சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். வீட்டுக்கு வந்த சிறுமி விஷயத்தை தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் தாய் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரை விசாரித்த கோபிசெட்டி பாளையம் மகளிர் நீதிமன்றம் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம்  பிரகாசுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து 2016 நவம்பரில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பிரகாஷ் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு:பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணின் தாய்க்கு பாலியல் தொடர்பான பொய்யான புகார் கொடுத்தால் தனது மகளின் எதிர்காலம் பாதிக்கும் என்று தெரியும். தனது மகளை காப்பாற்றுவதற்காக மகளிடம் விசாரித்த பிறகே புகார் கொடுக்க முடிவெடுத்துள்ளார். பாலியல் தொந்தரவு, கொடுமை என்பது வலுக்கட்டாய உறவு மட்டுமே என்று நினைத்துவிட கூடாது. மைனர் பெண்களுக்கு, சிறுமிகளுக்கு பாலியல் தொடர்பான படங்களை காட்டுவது, கதைகளை கூறுவது, தொடுவது, சீண்டுவது போன்ற குழந்தைகளின் மனதை பாதிக்கும் செயல்களும் பாலியல் குற்றங்கள்தான்.

தற்போதைய சூழலில் குழந்தை பாக்கியம் இல்லாமல் பலர் உள்ளனர். இந்த கடினமான காலக்கட்டத்தில் பெண் குழந்தைக்கு இதுபோன்ற பாலியல் தொந்தரவு தரப்படுவது பூ மற்றும் பழத்கை உருவாக்க செடியிலிருந்து மொட்டை பிய்ப்பது போன்றாகிவிடும். இதை ஏற்க முடியாது.  இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணின் சாட்சியம், தடய அறிவியல் அறிக்கை, சாட்சியங்கள், ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் விசாரணை நீதிமன்றம் மனுதாரருக்கு தண்டனை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் இந்த நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே, இந்த மேல் முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஈரோடு மகளிர் நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: