இந்தியாவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 1.4 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவிட திட்டம்: வாஷிங்டனில் நிர்மலா சீதாராமன் பேட்டி

வாஷிங்டன்: 2024-ம் ஆண்டில் 5 லட்சம் டாலர் பொருளாதாரத்தை எட்டும் இலக்கில், இந்தியாவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 1.4 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை செலவிட இருக்கிறோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சர்வதேச நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் ஆண்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றுள்ளார். சர்வதேச நிதியத்தின் நேற்றை ஆட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுப்பேசியதாவது: நிதியமைச்சகம் சார்பில் ஒரு செயல்திட்டக் குழு அமைக்கப்பட்டு, அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய உள்கட்டமைப்புக்குச் செலவிடும் நிதி குறித்து வரைவுத் திட்டம் தயார் செய்து வருகிறோம்.

2024-25-ம் ஆண்டுக்குள் இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயரும் என்று நம்புகிறோம். எங்களின் நோக்கம், இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த அடிப்படை வசதிகளை உருவாக்குவதாகும். இதற்காகக் கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுவரை 1.10 லட்சம் கோடி டாலர் செலவிட்டிருந்தநிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் 1.4 லட்சம் கோடி டாலரை செலவிடுவோம். இந்தியாவில் உள்நாட்டுக் கட்டமைப்பு முதலீட்டை அதிகப்படுத்து ஏராளமான நடவடிக்கைகள் திட்டங்கள் வகுத்துள்ளோம். கட்டமைப்பு கடன் நிதி, ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை, கட்டமைப்பு முதலீடு அறக்கட்டளை ஆகியவற்றை உருவாக்கியுள்ளோம். தனியாரும், அரசும் இணைந்து கூட்டாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். ஏற்கனவே இருக்கும் அடிப்படை வசதிகளையும் நவீனப்படுத்தி வருகிறோம். குறிப்பாகச் சாலைகளின் தரத்தை உயர்த்தி வருகிறோம்.

இந்தியாவில் கிராமப்பொருளாதாரம் மிகவும் முக்கியமானது வலிமையானது. அதிகமான அளவு உணவு தானிய உற்பத்தி செய்து வருகிறோம். உலக அளவில் வேளாண் பொருட்கள் விற்பனையும், விலையும் குறைந்ததால், அதன் தாக்கம் உள்நாட்டு அளவிலும் எதிரொலிக்கிறது. விவசாயிகளுக்கு வருவாயை அதிகரிக்கும் நோக்கில், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். இந்த திட்டத்தில் 1.45 கோடி விவசாயிகள் பலன்பெறுகிறார்கள். இயற்கை உரங்கள், இயற்கை விவசாயத்தைப் பெருக்கும் வகையில், ஜீரோ பட்ஜெட் வேளாண்மையை ஊக்குவிக்கிறோம். இதன் மூலம் செலவுகளைக் குறைத்து, விவசாயிகள் கடன் பெறுவது குறைக்கப்படும். இந்த திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானம் 2022-ம் ஆண்டுக்குள் இருமடங்காக அதிகரிக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Related Stories: