கார்ப்பரேட் வரி குறைப்பு முதலீட்டை அதிகரிக்கும்: ஐஎம்எப் கருத்து

வாஷிங்டன்: பொருளாதார மந்தநிலையை சீரமைக்கும் நடவடிக்கையாக கார்ப்பரேட் வரியை மத்திய அரசு குறைத்தது, அன்னிய முதலீடு அதிகரிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது. அதேவேளையில், பொருளாதார நிலைமையை நீண்ட காலத்திற்கு ஸ்திரத்தன்மை உடையதாக மாற்றுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வருவாய், செலவுகள் செய்யப்படுகின்றன. அதனால், எந்த ஒரு நடவடிக்கையையும் மிகுந்த கவனத்துடன்தான் எடுக்கப்படும் என்பதை அறிவோம்.

இருப்பினும், பெரிய நிறுவனங்களுக்கான வரியை குஹைக்கும் நடவடிக்கையை வரவேற்கிறோம். இது அன்னிய முதலீட்டில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை என்று ஐஎம்எப் அமைப்பின் இயக்குநர் சங்யாங் ஆர்கி நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்ததால், இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருந்தது. அடுத்த நிதியாண்டில் (2020ல்) பொருளாதார வளர்ச்சி 7.0 சதவீதமாக உயரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்தியாவின் நிதிக் கொள்கையால் ஊக்கம் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு போன்றவற்றால் மந்த நிலையில் இருந்து பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் திரும்பும். அன்னிய முதலீடு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றும் ஐஎம்எப் அதிகாரி தெரிவித்தார். வங்கி சாராத தனியார் நிதி நிறுவனங்களின் பிரச்னைகளை இந்தியா கவனத்து தீர்த்தால் பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று ஐஎம்எப் அமைப்பின் துணை இயக்குநர் அன்னி மரியே குல்டி-வுல்ப் தெரிவித்துள்ளார்.

* கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஏனெனில், முதலீடு செய்வதில் இது நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும் என்று பன்னாட்டு நிதியத்தின் (ஐஎம்எப்) ஆசிய பசிபிக் துறையின் இயக்குநர் சங்யாங் ஆர்கி தெரிவித்துள்ளார்.

* ஐஎம்எப் இயக்குநர் மேலும் கூறுகையில், நிதி நிலைமையை மேம்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். மேலும் நிதி நிலைமையில் நீண்ட காலம் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.

Related Stories: