ஐஎஸ்எல் கால்பந்து திருவிழா கேரளாவில் இன்று தொடக்கம்

கொச்சி: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 6வது சீசன் கொச்சியில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் கேரளா - கொல்கத்தா மோதுகின்றன. ஐஎஸ்எல் தொடரில் 2014 முதல்  2016 வரை 8 அணிகள் பங்கேற்றன. பின்னர்  பெங்களூர் எப்சி, ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகள் கூடுதலாக களம் கண்டன. இந்த சீசனிலும்  சென்னையின் எப்சி, மும்பை சிட்டி எப்சி, அத்லெடிகோ டி கொல்கத்தா,  எப்சி கோவா, கேரளா பிளேஸ்டர்ஸ் எப்சி,  நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி, பெங்களூர் எப்சி,  ஜாம்ஷெட்பூர் எப்சி, ஐதராபாத் எப்சி, ஒடிஷா எப்சி என 10 அணிகள் பங்கேற்கின்றன. கொச்சியில் இன்று இரவு நடைபெறும் முதல் போட்டியில் கேரளா - முன்னாள் சாம்பியன் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் பெங்களூர் - நார்த்ஈஸ்ட் மோதும் போட்டி நாளை பெங்களூரில் நடக்க உள்ளது.

முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்சி தனது முதல் போட்டியில் கோவா அணியை அக். 23ம் தேதி கோவாவில் சந்திக்கிறது. சென்னையில் முதல் போட்டி அக்.27ம் தேதி நடக்கும். அந்தப் போட்டியில் மும்பை அணியை சென்னை எதிர்கொள்கிறது.  சென்னையில் மொத்தம் 9 போட்டிகள் நடைபெறும். லீக் சுற்று பிப்.23ம் தேதி வரை நடைபெறும் (90 ஆட்டங்கள்). ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை விளையாடும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த முறை  கோப்பையை வெல்லும் முனைப்பில் எல்லா அணிகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், ஒவ்வொரு போட்டியும் பரபரப்பானதாக இருக்கும்.

ரசிகர்கள் ஆதரவு தருவார்களா?

சென்னையின் எப்சி அணியில் உள்ளூர் வீரர்களுக்கு அணியில் இடம் கிடைத்தாலும் ஆடும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கிறது. சென்னை வீரர் தனபால் கணேஷுக்கு 4வது தொடரில் மட்டும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் அதை சரியாக பயன்படுத்தினார்.  அரையிறுதியில் அவர் அடித்த கோல் சென்னையை பைனலுக்கு முன்னேற வைத்தது. அணியும் சாம்பியன் ஆனது. கடந்த ஆண்டு காயம் காரணமாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தஞ்சாவூர் வீரர் சீனிவாசன் பாண்டியனுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு தரவில்லை.

அதற்கு ஏற்ப உள்ளூர் போட்டிகளில் ரசிகர்களின் ஆதரவும் குறைந்தது. அணியும் தகுதிச் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. கடைசி இடத்தைதான் பிடித்தது. இந்த ஆண்டு சென்னை அணியில்  தனபால் கணேசுடன், நாகர்கோவில் வீரர் எட்வின் வென்ஸ்பால் இடம் பிடித்துள்ளார். ‘இவர்களை தேவைப்பட்டால் பயன்படுத்துவோம்’ என்று பயிற்சியாளர் ஜான் கிரிகோரி தெரிவித்துள்ளார். எனவே களம் காணும் வரை இவர்கள் இருவரும் விளையாடுவது உறுதியில்லை. அதனால் தமிழக ரசிகர்களின் ஆதரவும் சென்னை அணிக்கு கேள்விக்குறி தான்.

உள்ளே... வெளியே!

* நஷ்டம் காரணமாக ஐஎஸ்எல்  தொடரில் இருந்து டெல்லி டைனமோஸ் எப்சி, புனே சிட்டி எப்சி அணிகளின் உரிமையாளர்கள் மாறியுள்ளனர். அணிகளின் பெயர்களும் மாறியுள்ளன. டெல்லி, புனே அணிகளுக்கு பதிலாக, புதிதாக ஐதராபாத் எப்சி, ஒடிஷா எப்சி அணிகள் இந்த ஆண்டு இடம் பெற்றுள்ளன. டெல்லி அணி 2015, 2016ம் ஆண்டுகளிலும், புனே அணி 2017ம் ஆண்டு அரையிறுதிக்கு முன்னேறியதுதான் அந்த அணிகளின் அதிகபட்ச சாதனை.

* புதிய அணிகள் என்பதால் இந்த 2 அணிகளை அலட்சியம் செய்ய முடியாது. 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான பெங்களூர் 2 ஆண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதில் ஒருமுறை கோப்பையையும் வென்றது.

Related Stories: