ரோகித் - ரகானே அபார ஆட்டம்; சரிவிலிருந்து மீண்டது இந்தியா... 3 விக்கெட்டுக்கு 224 ரன் குவிப்பு

ராஞ்சி: தென் ஆப்ரிக்க அணியுடனான 3வது டெஸ்டில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்துள்ளது. தொடக்க வீரர் ரோகித் ஷர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.  தென் ஆப்ரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸி தொடர்ச்சியாக டாசில் தோற்று வந்ததால் அவருக்கு பதிலாக பவுமா டாஸ் போட வந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் இஷாந்த்துக்கு ஓய்வளிக்கப்பட்டு சுழற்பந்துவீச்சாளர் ஷாபாஸ் நதீம் அறிமுக வீரராக இடம் பெற்றார். தென் ஆப்ரிக்க அணியில் ஹெய்ன்ரிச் கிளாசன், ஜார்ஜ் லிண்டே அறிமுகமாகினர். வேகப் பந்துவீச்சாளர் லுங்கி என்ஜிடியும் அணியில் இடம் பிடித்தார்.

மயாங்க் அகர்வால், ரோகித் ஷர்மா இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். அகர்வால் 10 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் எல்கர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த புஜாரா டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, இந்தியா 16 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. கோஹ்லி 12 ரன் எடுத்த நிலையில் அன்ரிச் நோர்ட்ஜே வேகத்தில் எல்பிடபுள்யு ஆகி வெளியேற, இந்தியா 15.3 ஓவரில் 39 ரன்னுக்கு 3 விக்கெட் என சரிவை சந்தித்தது. இந்த நிலையில் ரோகித் - ரகானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. இவர்களைப் பிரிக்க தென் ஆப்ரிக்க வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. ரகானே அரை சதம் அடிக்க, மறு முனையில் ரோகித் சதம் விளாசி அசத்தினார். நடப்பு தொடரில் இது அவரது 3வது சதமாகும்.

இந்தியா 58 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரோகித் 117 ரன் (164 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்), ரகானே 83 ரன்னுடன் (135 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: