ஹெட்மயர் சாதனையை முறியடித்தார் ரோகித்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (2018-19) வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரோன் ஹெட்மயர் 15 சிக்சர்கள் விளாசியதே இருதரப்பு டெஸ்ட் வரலாற்றில் அதிகபட்சமாக இருந்தது. இந்த சாதனையை இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் ஷர்மா முறியடித்துள்ளார். தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் அவர் இதுவரை 16 சிக்சர்கள் விளாசி ஹெட்மயரின் சாதனையை தகர்த்து முதலிடம் பிடித்துள்ளார். 2010-11ல் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த தொடரில் இந்திய சுழல் நட்சத்திரம் ஹர்பஜன் சிங் 14 சிக்சர் விளாசி இருந்தார்.

* ஒரு டெஸ்ட் தொடரில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை விளாசிய 2வது இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையும் ரோகித்துக்கு கிடைத்துள்ளது. முன்னதாக சுனில் கவாஸ்கர் இந்த சாதனையை 3 வெவ்வேறு தொடர்களில் நிகழ்த்தி முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

*  வங்கதேச அணிக்கு எதிராக நடக்க உள்ள டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இந்திய மகளிர் பாக்சிங் அணி தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக நட்சத்திர வீராங்கனை மேரி கோமுடன் மோத தனக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் உலக ஜூனியர் சாம்பியன் நிகாத் ஜரீன் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் வீரர், வீராங்கனைகள் தேர்வு தொடர்பாக கூட்டமைப்புக்கு அரசு எந்த வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று அமைச்சர் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

* டோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்ததைப் போல, தனது தலைமையிலான இந்திய அணியும் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று கேப்டன் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய தென் ஆப்ரிக்க வீரர் குலாம் போடிக்கு (46 வயது) அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார்.

Related Stories: