மாநகராட்சி வணிக வளாகத்தில் வாடகை தராத 9 கடைகளுக்கு சீல்: ரூ24.19 லட்சம் நிலுவை தொகை வசூல்

வேளச்சேரி: சென்னை மாநகராட்சி 189வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிக்கரணையில் மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது. இதில், 40 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில், இங்குள்ள 25 கடை   வாடகைதாரர்கள் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வாடகை செலுத்தாததால் ரூ53 லட்சத்து 54 ஆயிரத்து 496 நிலுவை தொகை உள்ளது. எனவே, வாடகை பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும் என மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். ஆனாலும் தொடர்ந்து நிலுவைத்தொகை செலுத்தாமல் கடை வாடகைதாரர்கள் இருந்தனர்.

இந்நிலையில் பெருங்குடி மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில்,   உதவி வருவாய் அலுவலர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், வடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க நேற்று காலை வந்தனர்.

இதையடுத்து 16 கடைக்காரர்கள் ரூ24 லட்சத்து 19 ஆயிரத்து 502 வாடகை பாக்கியை உடனடியாக செலுத்தினர். மீதமுள்ள 9 கடைக்காரர்கள் வாடகை பாக்கியை செலுத்தவில்லை. இதையடுத்து அந்த 9 கடைகளுக்கு மட்டும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இவர்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகை ₹29 லட்சத்து 34 ஆயிரத்து 944 என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: