மகாராஷ்டிரா, அரியானாவில் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்: நாளை வாக்குப்பதிவு

மும்பை: மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜ, சிவசேனா கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. பாஜ-சிவசேனா கூட்டணி மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளன. இந்த இரு கூட்டணிகள் தவிர பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி, ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.), ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி உள்ளிட்டவையும் தேர்தல் களத்தில் உள்ளன.

தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கடந்த சில வாரங்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பாஜ சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்துள்ளனர். இவர்கள் தவிர மத்திய அமைச்சர்களும் பா.ஜனதா ஆளும் மாநில முதல்வர்களும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் புனே, சத்தாரா, பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி ஆகிய மூன்று இடங்களில் பிரசாரம் செய்தார். சிவசேனா சார்பில் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, கட்சியின் இளைஞரணி தலைவர் ஆதித்யா தாக்கரே தீவிர பிரசாரம் செய்துள்ளனர்.

இதேபோல காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் பல இடங்களில் சுழன்று, சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கடந்த சில வாரமாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் ஆளும் பாஜ பெரும்பாலான இடங்களில் போட்டியிடுகிறது. சில இடங்களை மட்டும் உதிரி  கட்சிகளுக்கு அளித்துள்ளது. இம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல், பலமுறை அரியானாவுக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், இம்மாநிலத்தில் நேற்று பிரதமர் மோடி பாஜ கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார். இதேபோல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் பிரசாரம் செய்தார். இந்நிலையில், இருமாநிலங்களிலும் அனல்பறந்த பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இன்று வேட்பாளர்களும் தொண்டர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளனர். வாக்குப்பதிவு நாளை நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24ம் தேதி எண்ணப்பட உள்ளன.

Related Stories: