பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றுவதை ஜனவரி வரை ஒத்திவைக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்: பிரதமர் போரிஸ் ஏற்க மறுப்பு

லண்டன்: ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான புதிய பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை  நடத்த இந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி பெற்றுள்ளார். இதற்கு இங்கிலாந்து எம்.பி.க்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரும்  31ம் தேதியுடன் பிரக்சிட்டுக்கான காலக்கெடு முடிய உள்ளதால், ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக இங்கிலாந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நேற்று கூட்டப்பட்டது. பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிய பிரக்சிட் ஒப்பந்தத்துக்கான விவாதத்தை தொடங்கி வைத்தார்.  

அதே நேரத்தில் புதிய பிரக்சிட் ஒப்பந்த விதிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதால், ஒப்பந்த காலக்கெடுவை ஜனவரி வரை நீட்டிக்க வேண்டும் என்ற முக்கிய திருத்த தீர்மானத்தை பழமைவாத கட்சி எம்.பி ஆலிவர் லெட்வின் தாக்கல் செய்தார். இந்த தீர்மானம் ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றது. ஆனால், இதை ஏற்க பிரதமர் போரிஸ் மறுத்து விட்டார். ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அவர் உறுதியாக இருப்பதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ‘‘பிரக்சிட் ஒப்பந்தம் தாமதம் குறித்து, ஐரோப்பிய யூனியனுடன் நான் இனி பேசமாட்டேன்’’ என உறுதிப்பட கூறினார். புதிய பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற 320 எம்.பிக்களின் ஆதரவு தேவை.

ஆனால் எத்தனை பேர் புதிய பிரக்சிட் ஒப்பந்தத்துக்கு ஆதரவளிப்பர் என தெரியவில்லை. அயர்லாந்துடன் சுங்க நடைமுறைகள் மற்றும் சோதனை முறைகள் தங்கள் கொள்கைக்கு எதிரானது என்பதால், இந்த புதிய ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவிக்க வடக்கு அயர்லாந்து ஜனநாயக யூனியன் கட்சி மறுத்துள்ளது.

Related Stories: