கமலேஷ் திவாரியை சுட்டுக்கொன்ற மூன்று கொலையாளிகள் ஸ்வீட் பாக்சால் சிக்கினர்

லக்னோ: கமலேஷ் திவாரி கொலை வழக்கில் ஸ்வீட் பாக்ஸ் மூலம் 3 கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர். உபி.யில் இந்து சமாஜ் கட்சியின் தலைமை அலுவலகம், அந்த மாநிலத் தலைநகரான லக்னோவில், குர்ஷித்பாக் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத சிலர், அலுவலகத்தில் இருந்த அக்கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரியை (45), ஸ்வீட் பாக்சில் இருந்து இனிப்பு வழங்குவதுபோல் நடித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி எடுத்து, சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கிடந்த திவாரியை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்து சமாஜ் கட்சியில் சேர்வதற்கு முன்பு, கமலேஷ் திவாரி இந்து மகாசபாவின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். மேலும், அயோத்தி வழக்கில் இந்து மகாசபா சார்பாக மேல்முறையீட்டாளர்களில் ஒருவராக உள்ளார். இவர் அவ்வப்போது, பிற மதங்கள் குறித்து சர்ச்சைக் கருத்துகளை தெரிவித்து பேசுவார். இதையடுத்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திவாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக இந்த வழக்கில் திவாரிக்கு ஜாமீனும் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொலையாளிகள் கொண்டு வந்த ஸ்வீட் பாக்ஸ் குறித்து ஆராயப்பட்டதில், அது குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஒரு பிரபல இனிப்பு கடையில் இருந்து வாங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு இரவோடு இரவாக அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதுதவிர பிஜ்னோரை சேர்ந்த முகமது முப்தி, இமாம் மவுலானா அன் வருல் ஹக் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: