பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் காமெடி சர்க்கஸ் நடத்துவது மத்திய அரசின் வேலையல்ல: பிரியங்கா கடும் தாக்கு

புதுடெல்லி: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விமர்சித்ததற்கு பிரியங்கா காந்தி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை அமெரிக்க இந்தியர் அபிஜித் பானர்ஜி பெற்றுள்ளார். இவர்தான் கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட, ‘நியாய்’ திட்டத்துக்கு ஆலோசனை வழங்கியவர். இத்திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ72 ஆயிரம் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் தள்ளாட்டத்தில் இருப்பதாக அபிஜித் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜ.வையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனால், பாஜ கடும் அதிருப்தியில் உள்ளது. இது குறித்து புனேயில் நேற்று முன்தினம் பேட்டியளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், ‘காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டத்துக்கு அபிஜித் பானர்ஜி ஆலோசனை வழங்கினார். ஆனால், அதை இந்திய வாக்காளர்கள் நிராகரித்து விட்டனர். அதனால், நாட்டின் பொருளாதாரம் பற்றி அவர் சொல்வதை  ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் கம்யூனிஸ்ட் கொள்கை கொண்டவர்,’ என்று தெரிவித்தார்.

கோயலின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘பாஜ தலைவர்கள், அவர்களின் வேலையை செய்வதற்கு பதில், அடுத்தவர் சாதனைகளை பொய்யாக்க முயற்சிக்கின்றனர். அபிஜித் பானர்ஜி தனது கடமையை நேர்மையாக செய்தார். அதற்காக அவர் நோபல் பரிசு பெற்றார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதை மேம்படுத்துவதுதான் உங்கள் வேலை. காமெடி சர்க்கஸ் நடத்துவது உங்கள் வேலை அல்ல,’’ என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: