திருச்சி வங்கி கொள்ளைக்கு பயன்படுத்திய சொகுசு வேன் பறிமுதல்

திருச்சி: திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளைக்கு பயன்படுத்திய சொகுசு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி சமயபுரம் அருகே நெ.1 டோல்கேட்டில் உள்ள பஞ்சாப்நேஷனல் வங்கியின் பின்பக்க சுவரை துளையிட்டு கடந்த ஜனவரி 25ம் தேதி 457 பவுன் நகை, ரூ.19.90 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2ம் தேதி திருச்சி லலிதா ஜூவல்லரியில் ரூ.13 கோடி மதிப்பிலான 29கிலோ நகைகள் கொள்ையடிக்கப்பட்டது  இதில் கொள்ளையர் கும்பல் தலைவர் முருகன், சுரேஷ் உள்பட பலர் சிக்கினர்.

இதில் கைதான மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த கணேசன், பஞ்சாப்நேஷனல் வங்கி கொள்ளையிலும் தாங்களே ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து கணேசனின் நீதிமன்ற காவல் நேற்றுமுன்தினம் முடிந்ததையொட்டி போலீசார் ஸ்ரீரங்கம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரிடம், பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை குறித்து 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி இன்ஸ்பெக்டர் மதன் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்ற நீதிபதி சிவகாமிசுந்தரி, 7 நாட்கள் போலீஸ் காவல் அளித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை உருக்கி மதுரையில் யாரிடம் விற்பனை செய்யப்பட்டது என அறிய கணேசனை மதுரைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து கணேசன் வீட்டுக்கு முன் நிறுத்தி இருந்த சொகுசு வேனை போலீசார் கைப்பற்றி திருச்சி எடுத்து வந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>