கோவை, நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 6 ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சேலம்: சேலம் உள்ளிட்ட 6 ரயில்வே ஸ்டேஷன், கோவை, நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 6 ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் 1 மாதத்துக்குப்பின் சிக்கினார். ஸ்டேஷன் அருகில் உள்ள போஸ்ட் பாக்சிலேயே அவர் கடிதத்தை போட்டுச் சென்றதாக கூறியுள்ளார். சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட 6 ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் கோவை எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 6 ரயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என கடந்த மாதம், ஒரு மிரட்டல் கடிதம் கோட்ட மேலாளருக்கு வந்தது. இதுபற்றி சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

டிஎஸ்பி பாபு, இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தினர். அதில், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்த ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் தலைவன் மணிவேலை பழிவாங்க, மர்மநபர்கள் கடிதத்தை அனுப்பியது கண்டறியப்பட்டது. அவரிடம் நடந்த விசாரணை அடிப்படையில் 6 பேரை கண்காணித்து வந்தனர். அதில், கடிதம் கிடைத்த நாளுக்கு 2 நாள் முன்பாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கட்டிபாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் (49), ரயில்வே ஸ்டேஷன் பகுதிக்கு வந்து சென்றது உறுதியானது.

இதையடுத்து ரவிக்குமாரை பிடித்து, தீவிர விசாரணை நடத்தினர். அதில், ரேஷன் அரிசி வாங்குவதில் ஏற்பட்ட மோதலில் மணிவேலை பழிவாங்க மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியதை ரவிக்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>