ரூ500 கோடி வரி ஏய்ப்பு செய்த விவகாரம்: மனைவியுடன் கல்கி சாமியார் திடீர் மாயம்.... வெளிநாட்டில் தஞ்சமா? அதிகாரிகள் விசாரணை

சென்னை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், வரதய்யபாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் இயங்கி வருகிறது. இதில் கல்கி சாமியாராக விஜயகுமாரும், அம்மா பகவானாக விஜயகுமாரின் மனைவி பத்மாவதியும் அழைக்கப்படுகின்றனர். இந்த ஆசிரமத்திற்கு வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பலகோடி ரூபாய் பணம் வந்ததாக கூறப்படுகிறது. அவரது மகன் கிருஷ்ணா நடத்திய நிறுவனம் மூலம் ஆசிரம பணம், மாற்றப்பட்டு முதலீடு செய்யப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமங்கள், அலுவலகங்கள் என 40 இடங்களில் 500க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் மொத்தம் ரூ43.9 கோடி ரொக்கம், ரூ18 கோடி அமெரிக்க டாலர், 88 கிலோ தங்கம், ரூ5 கோடி மதிப்புள்ள 1271 கேரட் வைரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சோதனை நடந்தபோது எந்த ஆசிரமத்திலும் கல்கி சாமியார் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி பத்மாவதி இல்லை. இதனால் அரவ்கள் இருவரும் எங்கு சென்றார்கள்?  என்பது மர்மமாக  உள்ளது. விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, கிருஷ்ணாவின் மனைவி பிரீத்தி, ஆசிரமத்தின் சிஇஓ லோகேஷ் மற்றும் சீனிவாஸ் ஆகியோரிடம் வருமானவரித் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜயகுமார் குறித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணா நிருபர்களிடம் கூறுகையில், வயது மூப்பு காரணமாக தந்தையும், தாயும் வெளியே வருவதில்லை. பக்தர்களுக்கு அவ்வப்போது காணொளி காட்சி மூலம் அருள்பாலித்து வருகின்றனர் என்றார்.

வருமான வரித்துறை  சோதனையிலும் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி பத்மாவதி குறித்து எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் அவர்கள் வெளிநாட்டில் தங்கி உள்ளார்களா? அல்லது இந்தியாவிலேயே வேறு எங்காவது பதுங்கி உள்ளார்களா? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்தால் மட்டுமே இந்த ஆசிரமம் ஆரம்பத்தில் இருந்து இந்த அளவிற்கு எப்படி விரிவடைந்தது? இவர்களுக்கு எந்தெந்த இடத்தில் இருந்து பணம் கிடைத்தது?. இதன் பின்னணியில் வேறு ஏதாவது அரசியல் கட்சிகளுக்கோ அல்லது நடிகர் நடிகைகளுக்கோ தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி பல்வேறு அறக்கட்டளை மூலமாக கைமாற்றப்பட்டதா?  என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கல்கி பகவான் மற்றும் அவரது மனைவி இருவரும் உயிருடன் உள்ளார்களா? அல்லது இறந்து விட்டார்களா என்று சந்தேகமும் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு காரணம் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி பத்மாவதி உயிருடன் இருந்தால் மட்டுமே பல்வேறு நாடுகளில் இருந்து வரக்கூடிய பக்தர்களின் வருகை தொடர்ந்து இருக்கும்.  அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று தெரிந்தால் பக்தர்கள் யாரும் வர மாட்டார்கள். இதனால் அறக்கட்டளைக்கு வரக்கூடிய நிதிகள் அப்படியே நின்றுவிடும் என்ற காரணத்தின் காரணமாக அவர்கள் குறித்த தகவல் ரகசியமாக வைத்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

எனவே விஜயகுமார் மற்றும் அவரது மனைவி பத்மாவதி எங்கு உள்ளார்கள்? அல்லது அவர்கள் இறந்துவிட்டார்களா? என்பதை  விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து விஜயகுமார் மற்றும் பத்மாவதியின் பாஸ்போர்ட்டை வருமான வரித்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். வருமான வரித்துறையின் விசாரணைக்கு விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரிடம் தீவிரமாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: