தீபாவளிக்கு 100 வகையான புதிய பட்டாசுகள் அறிமுகம்: ரூ10 முதல் ரூ18,000 வரை விற்பனை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு 100 வகையான புதிய பட்டாசுகள் விற்பனைக்காக வந்துள்ளது. தமிழகம் முழுவதும் ரூ1000 கோடிக்கு பட்டாசு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

தீபாவளி பண்டிகை வருகிற 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானம், நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம் எதிரில் உள்ள மைதானம், வடபழனி ஆர்.கே.ரோடு, போரூர் சரவணா ஸ்டோர்ஸ் எதிரே உள்ள மைதானம், கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம், பாரிமுனை, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்க ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. இந்த இடங்களில் வருகிற திங்கட்கிழமை முதல் தீபாவளி பட்டாசு விற்பனை முழுவீச்சில் தொடங்கும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து சென்னை பெருநகர பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்க செயலாளர் அனீஷ் ராஜா கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பட்டாசு கடைகள் அமைக்க சுமார் 600 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தற்போது வரை 250 பேருக்கு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ளவர்களுக்கு விரைவில் அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு தீபாவளிக்காக 100 புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்காக வந்துள்ளது. ₹10 முதல் ₹18,000 விலையில் பட்டாசு ரகங்கள் கிடைக்கும். கடந்த ஆண்டை விட இந்தாண்டு பட்டாசுகள் 5 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆன்லைன் பட்டாசுகள் விற்பனைக்கு உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தடை விதித்துள்ளது. இருந்தாலும் ஆன்லைன் பட்டாசு விற்பனை நடைபெற்று தான் வருகிறது.

ஒரு வெப்சைட்டை முடக்கினால், புதிய பெயரில் வெப்சைட் திறந்து செய்து சீன பட்டாசுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. தற்போது போன் செய்தாலே போதும், சீன பட்டாசுகள் வீடுகளுக்கே தேடி வரும் என்று விளம்பரம் செய்து வருகின்றனர். இதனை முழுமையாக தடை செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளிக்காக இந்தாண்டு பசுமை பட்டாசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருவதற்கு சாத்தியமில்லாத ஒன்று. பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டு விடுமோ? என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் இந்தாண்டு குறைவான அளவிலேயே பட்டாசுகளை தயாரித்துள்ளனர். இந்த பட்டாசுகள் ஒரு நாள் விற்பனைக்கு தான் வரும். இதனால், பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு ரூ10 லட்சத்திற்கு பட்டாசு வாங்கிய வியாபாரிகள், தற்போது பட்டாசு தட்டுப்பாட்டால் ரூ1 லட்சத்துக்கு தான் பட்டாசுகளே அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் அனுப்பி வைக்கின்றனர்.

பட்டாசுகளுக்கும், பசுமை பட்டாசுகளுக்கும் எந்த ஒரு ெபரிய வித்தியாசம் கிடையாது. பேக்கிங் எல்லாம் ஒன்று தான். பசுமை பட்டாசு என்று மேல் சீல் வைக்கப்பட்டிருக்கும். பசுமை பட்டாஸில் புகை குறைவான அளவுக்கு வரும் அவ்வளவு தான். தமிழகம் முழுவதும் இந்தாண்டு ரூ1000 கோடிக்கு பட்டாசு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ரூ40 கோடி வரை பட்டாசு விற்பனையாக வாய்ப்பு உள்ளது. பட்டாசு உற்பத்தி பாதிப்பால் அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள், பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர், வியாபாரிகள் என சுமார் 20 லட்சம் பேர் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு தயாரிப்பு நிறுத்தத்தால் பலர் வேறு வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: