மத்திய அரசு புதிய திட்டங்களை வகுக்காததால் கோர்ட்டில் 5.34 லட்சம் வழக்கு தேக்கம்: உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேச்சு

சென்னை: மத்திய அரசு புதிய திட்டங்களை வகுக்காததால் நீதிமன்றங்களில் 534 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார். தென்மாநில உயர் நீதிமன்றங்களில் உள்ள மத்திய அரசு வக்கீல்களின் மூன்றாவது கருத்தரங்கம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த 2 நாள் கருத்தரங்கத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன்  தொடங்கி வைத்தார். உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன் மற்றும் தென் மாநிலங்களின் மத்திய அரசு வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன் பேசியதாவது: நீதி எது, அநீதி எது என்பது எப்போதும் விவாதத்துக்குள்ளான விஷயமாகவே உள்ளது. அரசு சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அதற்கு அரசுத் தரப்பிலிருந்து சரியான தகவல்கள் வராததும் காரணம். அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். சட்டம் மற்றும் நீதித்துறையிடம் நடப்பாண்டில் 2 ஆயிரத்து 768 நீதிமன்றங்களில் மத்திய அரசு தொடர்புடைய 5 லட்சத்து 3,450 வழக்குகள்  நிலுவையில் உள்ளன.சமரச தீர்வு காணுவதற்காக 4 ஆயிரத்து 750 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆன்லைன் மூலம் தீர்வு காண்பதை நிதி மற்றும் பாதுகாப்பு துறை ஆகியவை செயல்படுத்தப்பட்டு நிலுவைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வரிவிதிப்பு தொடர்பான 3000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள 2017-18ம் ஆண்டறிக்கையின்படி, 7 ஆயிரத்து 381 கோடி ரூபாய் மதிப்பிலான நிலுவையில் உள்ள வழக்குகளில் 729 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வழக்குகளில் அதாவது 10 சதவீத வழக்குகளில் மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடையை வழக்குகளில் சரோட் மூலம் ஆயிரத்து 14 வழக்குகள் சமரச நிலையிலும், 730 வழக்குகள் நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு எதிராக சமரச தீர்வு மையங்களில் மட்டும் 55 ஆயிரத்து 344 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு கேட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல 7 ஆயிரத்து 439 கோடி ரூபாய் அளவிற்கு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது.

இதேபோல, சமரச மையத்தில் இழப்பீடு கோரி 4 லட்சத்து 30 ஆயிரத்து 137 அமெரிக்க டாலர் இழப்பீடு கோரிய வழக்குகளும், நீதிமன்றங்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 180 யூரோ மதிப்புள்ள இழப்பீடு கோரிய வழக்குகளும் நிலுவையில் உள்ளன. வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க புதிய திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும். அப்போதுதான் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறையும். இவ்வாறு நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார். இந்த கருத்தரங்கத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அரசு வக்கீல்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: