எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன், சிறுமி உயிரிழப்பு

சென்னை: டெங்கு காய்ச்சலுக்கு சென்னை, புழலில் சிறுவன், சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம்  அரசு  மருத்துவமனைகளில் மர்ம காய்ச்சலால்  பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்நிலையில் சென்னை பெரியமேடு, ஸ்டிங்கர்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஆனந்த். இவரது மகள் அக்சதா. அப்பகுதியிலுள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் அவளுக்கு நேற்று திடீரென உடல்நிலை சரியில்லாததால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதித்த போது சிறுமி இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, அப்பகுதி மக்கள் கூறும்போது டெங்கு காய்ச்சலால் சிறுமி இறந்ததாக குற்றம்சாட்டினர்.  ஆனால், மருத்துவமனை தரப்பில் சிறுமிக்கு சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பு இருந்ததாகவும், அதனால் இறந்ததாகவும் தெரிவித்தனர். இதுபோல, புழல் அடுத்த புத்தாகரம் புருஷோத்தமன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் குணசேகரன். கூலி தொழிலாளி. இவரது மூத்த மகன் அரவிந்தன் (10). தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். 2வது மகன் அருணாசலம் (8). அதே பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான்.

இருவருக்கும் கடந்த 17ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவர்களை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக  எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அரவிந்தன் மற்றும் அருணாசலத்திற்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை அரவிந்தன் பரிதாபமாக இறந்தான். அருணாசலத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: