தீயணைப்பு மீட்புத்துறை பணி இடமாறுதலுக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்: ஊழியர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையில் பணி இடமாறுதலுக்கு ₹30 லட்சம் லஞ்சம் பெறப்படுவதாக ஊழியர்கள் தரப்பில் இருந்து பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தமிழகம் முழுவதும் 329 தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலையங்கள் உள்ளது. இத்துறையில் 7 ஆயிரத்து 345 பணியாளர்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். இதில், 4 ஆயிரத்து 537 பேர் தீயணைப்போராக உள்ளது. இந்தநிலையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் ஊழியர்கள் பணியிட மாறுதலுக்கு உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணியிட மாறுதல் செய்வதாக ஊழியர்கள் தரப்பில் இருந்து பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ₹30 லட்சம் வரையில் பணியிடமாறுதலுக்கு லஞ்சம் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஊழியர்கள் தரப்பில் கூறியதாவது:தமிழ்நாடு தீயணைப்பு துறை பணியாளர் குறைதீர்க்கும் நாள் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி நடைபெற்றது. இந்த குறைதீர்வு நாளில் பணியாளர்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் அதிகாரிகளால் பெறப்பட்டது.

இதில், பணியிட மாறுதல் கோரி பல ஊழியர்கள் மனு அளித்தனர். இதில் பணியிட மாறுதலுக்கு பணம் கொடுத்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டுமே பணியிடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அலுவலர்களுக்கு ₹30 லட்சம் வரையும், உதவி மாவட்ட அலுவலர்களுக்கு ₹3 லட்சம் வரையும் இந்த மாறுதலில் லஞ்சமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பணியிட மாறுதலுக்கு வழங்கப்பட்ட ஆணைகள் அனைத்தையும் ரத்து செய்து தகுதியின் அடிப்படையில் பணியிடமாறுதல் வழங்கப்பட வேண்டும். லஞ்சம் வாங்கும் உயர் அதிகாரிகளை மாற்றி நேர்மையான அதிகாரிகளை இத்துறைக்கு நியமனம் செய்ய வேண்டும். அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கையால் ஊழியர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளோம். இவ்வாறு கூறினர்.

கட்டிட அனுமதிக்கு பல லட்சம் லஞ்சம்

தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், பார்கள், விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்றால், தீயணைப்புத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி கடிதம் வந்தவுடன் தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகளை புரோக்கர்கள் உதவியுடன் சந்திக்க வேண்டும். அப்போது அவர்கள் கேட்கும் லட்சங்களை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தள்ளுபடி செய்து விடுவார்கள். இந்தப் பணம் உயர் அதிகாரிகள் முதல் கீழ் மட்ட அதிகாரிகள் வரை பங்கு பிரித்துக் கொள்வார்கள். சில பெண் அதிகாரிகள் நேர்மையானவர்கள் என்று ஊழியர்கள் மத்தியில் காட்டிக் கொண்டாலும், அவர்களது கணவன் மூலமாக பணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக சென்னை மற்றும் திருச்சியில் இதுபோல முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புரோக்கர்கள் தீயணைப்புத்துறை அலுவலகத்திலேயே பகல் முழுவதும் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தீபாவளிக்கு பெரிய அளவில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் வசூலில் ஈடுபட்டு வருவாதகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தீயணைப்புத்துறையினரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

Related Stories: