×

இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்ட நிலையில் ரசாயனம் கலந்த உணவுகளால் 4.9 கோடி பேர் பாதிப்பு: விதிமீறல்களை தடுக்க கோரிக்கை

வேலூர்: இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்ட நிலையில், ரசாயனம் கலந்த உணவுகளால் 4.9 கோடி பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  இந்தியாவில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், உணவு பொருட்களில் வேதிப்பொருட்கள் கலந்து உயிருக்கு கேடு விளைவிப்பதோடு, மண்ணின் தரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.  இதுதவிர பாஸ்ட் புட், தரமற்ற எண்ணெயில் தயாரித்த உணவுகள் உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.  இந்தியாவில் தற்போது போலியோ முழுவதுமாக தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 7 கோடிக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். இவர்களில் 4.9 கோடிக்கும் மேற்பட்டோர் மூளைத்திறன் பாதிப்புக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரசாயனம் கலந்த உணவுகள் பயன்பாட்டால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பதாகவும், கருவில் இருக்கும் குழந்தைகளும் ரசாயன உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தப்பவில்லை என்றும் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது.

இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழி 40 நாட்களில் முழு வளர்ச்சி அடைகிறது. இதற்காக, 12 வகையான மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஒரு கிலோ கோழி இறைச்சியில் 600 கிராம் வரை ரசாயனம் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இறைச்சியை சாப்பிடுவதால் கேன்சர் உள்பட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற விளைவுகளை தடுக்க கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி, பிராணிகளுக்கான மருந்துகளை தயாரிக்க தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து உள்ளது.அதேபோல், உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அஜினோமோட்டாவால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அஜினோமோட்டோ பயன்பாட்டுக்கு தடை விதிக்க தமிழக அரசு கடந்த சில நாட்கள் முன்பு முடிவெடுத்தது. ஆனால், மத்திய மாநில அரசுகளின் இந்த முடிவுகள் பரிசீலனையில் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.ரசாயனம் கலந்த உணவுகளால் அதிகப்படியானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, உணவு விற்பனையில் விதிமீறல்களை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

வீட்டுக்கு மாடித்தோட்டம் அவசியம்
ஒவ்வொருவரது வீட்டிலும் தோட்டங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், அருகருகில் அமைந்த குடியிருப்புகளால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான வீடுகளில் மட்டுமே தோட்டங்கள் தற்போது இருக்கிறது. இதனால், இருக்கும் இடத்தை பயன்படுத்தி இயற்கையான முறையில் காய்கறிகளை விளைவிக்க மாடி வீட்டு தோட்டம் அமைக்க வேளாண் துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அதிலிருந்த விழிப்புணர்வும் பொதுமக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. இந்தியாவில் 34 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சரிசெய்ய இயற்கையான காய்கறிகளை சாப்பிட வேண்டும். எனவே, காய்கறிகளை விளைவிக்க மாடி வீட்டு தோட்டம் செயல்படுத்த வேண்டிய அவசியத்தை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மாடி வீட்டு தோட்டத்தை பராமரித்தால், வீட்டில் சேரும் காய்கறி கழிவுகளை உரமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

பல கோடி ரூபாயில் வழங்கப்படுபவை அரசு பள்ளிகளில் முடங்கிய கற்றல் உபகரணங்கள்: ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி
நாகர்கோவில், அக்.20: அரசு பள்ளிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள், பயன்பாடு இல்லாமல் முடங்கியுள்ளது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு பள்ளிகளின் வகுப்பறைகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் நல்ல முறையில் நடைபெற தேவையான கற்றல் உபகரணங்கள் கண்டறியப்பட்டு அரசால் ஆண்டுதோறும் பல்வேறு திட்டங்களில் தொடக்க கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக மாணவர்களின் கணித திறனை மேம்படுத்த கணித உபகரண பெட்டி, அறிவியல் மனப்பான்மையை தூண்டுவதற்கு அறிவியல் உபகரண பெட்டி, ஆங்கில திறனை மேம்படுத்த ஆங்கில உபகரண பெட்டி, வாசித்தலை மேம்படுத்த நிலை வாரியாக புத்தக பூங்கொத்துகள், நூலக புத்தகங்கள், குறுந்தகடுகள், ஆங்கிலம் - தமிழ்ப்பாட அகராதி, தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த கணினி, மடிக்கணினி, டேப், விளையாட்டு பொருட்கள், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் போன்று பல்வேறு வகையான கற்றல் கற்பித்தல் பொருட்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளால் பல கோடி ரூபாய் ஆண்டுதோறும் செலவிடப்படுகிறது.

ஆனால் கற்றல் கற்பித்தல் துணை கருவிகள் வகுப்பறையில் சிறப்பாக பயன்பாட்டில் இல்லை என்பது உயர் அதிகாரிகள் பள்ளிகளுக்கு ஆய்வு செல்லும்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு தோறும் பொதுமக்களின் பங்களிப்பு மூலம் பெறப்படுகின்ற தளவாட பொருட்களும், கல்வி சார் உபகரணங்களும் மற்றும் கல்வி சீர் போன்ற நிகழ்வுகள் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் பெற்றோர், பொதுமக்களால் நன்கொடையாக பள்ளிகளில் பெறப்பட்ட பங்களிப்பு பொருட்களும் பள்ளிகளில் சரிவர பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இவை கேட்பாரற்ற நிலையில் முடங்கியுள்ளன.இவற்றை பயன்படுத்தும் போதுதான் மாணவர்களின் சிந்திக்கும் திறன், படைப்பாற்றல், அறிவாற்றல் போன்ற திறன்களை வளர்த்தெடுக்க இயலும். அப்போதுதான் மாணவர்களால் தேசிய, மாநில அளவிலான அடைவு தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள இயலும் என்று கல்வித்துறை கருதுகிறது.

எனவே இது தொடர்பாக ஆசிரியர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘மாவட்ட கல்வி அலுவலர், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் போன்ற அனைத்து நிலை கள அலுவலர்களின் பள்ளி பார்வையின்போது பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் துணை கருவிகள் வகுப்பறைகளில் பயன்பாட்டில் அமைந்திட வலியுறுத்த வேண்டும். மேலும் குறுவளமைய மேல்நிலை, உயர்நிலை, தலைமை ஆசிரியர்களும் தங்களுக்கு கீழ் ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள துணை பொருட்கள் முறையாக பயன்பாட்டில் உள்ளதா? எனவும் கண்காணிக்க வலியுறுத்தப்பட வேண்டும். அனைத்து நிலையிலும் உள்ள கள அலுவலர்களின் பள்ளி பார்வை வலுப்படுத்தப்படுவதற்கும், பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள கற்றல் கற்பித்தல் துணை பொருட்களின் பயன்பாட்டினை உறுதி செய்வதற்கும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : India , 4.9 crore people, affected , polio eradication,India , polio eradication
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...