×

புதுப்பொலிவுடன் கவாஸாகி நிஞ்சா 650

ஜப்பான் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் கவாஸாகி நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த நிஞ்சா 650 மாடலுக்கு 2020-ம் ஆண்டிற்கான மறுசீரமைப்பை (அப்டேட்) வழங்கியுள்ளது. இதில், புதிய அப்டேட்டுகளாக பல்வேறு சிறப்பம்சங்களை கவாஸாகி நிறுவனம் சேர்த்துள்ளது. இதனால், ஏற்கனவே ஸ்போர்ட்டி லுக்கில் காட்சியளித்து வந்த நிஞ்சா 650, தற்போது சூப்பர் ஸ்போர்ட் பைக்காக அவதாரம் எடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, பல்வேறு அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகள் இந்த பைக்கில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.அந்தவகையில், உயர் தொழில்நுட்ப வசதிகளாக ப்ளூடூத் மூலம் பைக்குடன் செல்போனை இணைக்கும் அம்சம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் செல்போனை ஒருபோதும் மிஸ் செய்ய விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அந்த வகையில், செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றையும் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள டிஎப்டி திரை மூலம் அது காட்சிப்படுத்தும். அதேபோன்று, பைக்கில் உள்ள ஒருசில கருவிகளை கட்டுப்படுத்தவும் அது உதவுகிறது.

நிஞ்சா 650 பெற்றிருக்கும் பல அப்டேட்டுகளில் இந்த டிஎப்டி வண்ணத்திரையும் ஒன்றாகும். இது, 10.9 செ.மீ அளவில் காட்சியளிக்கிறது. இதில், ப்ளுடூத் வசதி மட்டுமின்றி ஜிபிஎஸ் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பைக் தொலைந்து விட்டாலோ, பைக்கை நிறுத்திய இடத்தை மறந்துவிட்டாலோ, அதனை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். மேலும், இந்த டிஎப்டி திரை மூலம் கியர் பொசிஷன், இன்டிகேட்டர், எரிபொருள் அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும்.இந்த பைக்கின் அதீத வேகத்தை வெளிப்படுத்துவதற்காக 650சிசி திறன் கொண்ட பேரல்லல் ட்வின் மோட்டார் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 67 பிஎச்பி பவரையும், 49 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், இந்த இன்ஜின் திறனை சற்றும் பாதிக்காத வகையில் டிரெல்லிஸ் பிரேமை கொண்டு பைக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக், பச்சை மற்றும் கருப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய மூன்று விதமான வண்ண தேர்வில் விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய அப்டேட் பெற்றிருக்கும் இந்த பைக்கின் விலை விவரம் அறிவிக்கப்படவில்லை. இதன் அறிமுகம் குறித்த தகவலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

Tags : Kawasaki Ninja, 650 , refresher
× RELATED ட்வீட் கார்னர்... புதுப்பொலிவுடன்!