×

பயணிகள் புலம்பல் தொடருது...காக்கிகளுக்கோ வசூல் குவியுது...!

கோவை காந்திபுரத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்கள் அமைந்துள்ளதோடு, ஏராளமான நகைக்கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அதனால், இப்பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து பரபரப்பாக காணப்படுகிறது. இப்பகுதியில், காட்டூர் காவல் நிலையம் உள்ளது. இதன் எல்லைக்குள் 10 டாஸ்மாக் ‘’பார்’’கள் உள்ளன. மேலும், 15க்கும் மேற்பட்ட பெர்மிட் பெற்ற தனியார் ஏ.சி ‘’பார்’’கள் உள்ளன. ‘’பார்’’களில் மது அருந்த மட்டுமே அனுமதி உண்டு. ஆனால், டாஸ்மாக் ‘’பார்’’களில் சட்ட விரோதமாக மது விற்பனை நடக்கிறது. நள்ளிரவில் சரக்கு வேண்டுமென்றால், கூடுதல் ரேட், பிக்ஸ் செய்து விடுகிறார்கள். இந்த சட்ட விரோத செயல்களுக்கு உள்ளூர் போலீசார் உடந்தையாக இருப்பதால், டாஸ்மாக் ‘’பார்’’களில் மது விற்பனை ஜரூராக நடக்கிறது. இதன் ரகசியம் என்னவென்றால், காட்டூர் காவல்நிலைய மூன்று ஸ்டார் அதிகாரி முதல் கிரேடு 2 போலீசார் வரை அனைவருக்கும் மாதம்தோறும் ₹1 லட்சம் வரை “கப்பம்’’ கட்டப்படுவதாக தகவல். ‘’குடி’’மகன்களின் அலம்பலால், காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளின் புலம்பல் தொடருது... போலீசுக்கு வசூல் குவியுது.

புரோக்கர்கள், ரவுடிகள் பிடியில் குமரி காவல் நிலையம்
குமரி மாவட்ட காவல்துறையில் ரவுடிகளுடனும், கூலிப்படைகளுடனும் காவல் நிலைய அதிகாரிகள் சிலர் கூட்டு சேர்ந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கருங்கல் பகுதியில் புதையல் விவகாரத்தில் ஜெர்லின்ராஜ் என்ற வாலிபர் கூலிப்படையால் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டார். இந்த பின்னணியை விசாரித்த போது கருங்கல் இன்ஸ்பெக்டர் பொன்தேவி மற்றும் இரு போலீசார் உதவி இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது இன்ஸ்பெக்டர் பொன்தேவி உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இன்ஸ்பெக்டர் பொன்தேவி மட்டுமின்றி மேலும் பல காவல் நிலையங்களில் புரோக்கர்கள் பெயரில் ரவுடிகள், கூலிப்படையை சேர்ந்தவர்கள் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் சிலரை கூட்டு சேர்த்துக் கொண்டு பல சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் செயல்களை தட்டிக்கேட்பவர்கள் மீது பொய்யாக புகார் மனுக்களை எஸ்.பி.க்கும், உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வருகிறார்கள். அவர்களாகவே போலி முத்திரை, கையெழுத்துக்களை பயன்படுத்துகிறார்கள். கருங்கல் காவல் நிலைய விவகாரம் வெளி வந்ததை தொடர்ந்து மேலும் பலர் சிக்குவார்கள் என தெரிகிறது. எந்தெந்த காவல் நிலையங்களில் இது போன்ற புரோக்கர்கள், ரவுடிகள் தலையீடு உள்ளது என்பது பற்றி பட்டியல் தயாரிக்க எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். அந்தந்த எஸ்.பி. ஏட்டுக்கள் உண்மையான பட்டியலை எஸ்.பி.க்கு அனுப்பி வைத்தால், பல இன்ஸ்பெக்டர் தலை உருளும் என்ற நிலை உள்ளது. காவல் நிலையங்களை சீரமைக்க முதற்கட்டமாக புரோக்கர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

விமானத்தில் ஏறும் விஐபிகளிடம் வசூல்
மதுரை விமானநிலையத்தில் மத்திய பாதுகாப்பு படையினருடன், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் முக்கிய நகர் என்ற பெருமைக்குரிய மதுரைக்கு, விமானத்தில் பயணித்து திரும்புகிற விஐபிகள், விவிஐபிகள் எண்ணிக்கை ஏராளம். இவர்கள் வருகையின்போது கூட்டத்தை விலக்கி அவதியின்றி அனுப்பவும், வரும்போது வரவேற்றிடவும் என முக்கிய ஆளுங்கட்சி அரசியல் தலைவர்கள், இங்கிருக்கும் போலீசாரில் சிலருக்கு மட்டும் ஒரு தொகையைப் பரிசாகத் தருவதென்பது காலம் காலமான நடைமுறையாகத் தொடர்கிறது. தற்போது விமானநிலையத்துக்கு வரும் முக்கிய தொழிலதிபர்கள், வியாபாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட எந்த முக்கிய நபர்களையும், விமான நிலையத்தின் போலீசார் விடாமல் போட்டி போட்டு தீபாவளியைக் காரணம் காட்டி வசூல் களத்தில் இறங்கியுள்ளனராம். எல்லோரும் ஒரே நேரத்தில் போனால், வசூலாகாது என்பதால் இதற்கென 2 பேரை நியமனம் செய்திருக்கின்றனராம். இவர்கள் பாதுகாப்பு பணியை எல்லாம் விட்டு விட்டு, விஐபிகள் வருகையை மட்டுமே கண்காணித்து, கணக்கிட்டு, காசு பார்ப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்களாம். இந்த ‘வசூல்’ பணியில் ஈடுபடாத மற்ற போலீசார், ‘எங்க பேரையும் ஏன் கெடுக்கிறீங்க?’ என்றபடி வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்களாம்.

கம கமக்கும் கறி விருந்து... தூள் கிளப்பும் சூதாட்டம்!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து ஈரோட்டிற்கு செல்லும் வழியில் வாய்க்கால்மேடு கே.கே.நகர் என்ற பகுதியில் மன்றம் என்ற பெயரில் ஒரு சூதாட்ட கிளப் உள்ளது. பணம் வைத்து சூதாடுவது, மதுபான விருந்து படைப்பது என சட்ட விரோத செயல்கள் இங்கு தாராளம். சூதாட்டம் பல நேரங்களில் சூடு பிடிப்பதால், நேரம், காலம் தெரியாமல் விடிய, விடிய நடக்கிறது. இங்கு, ஆய்வுக்கு செல்கிறோம் எனக்கூறி காவல்துறை அதிகாரிகள் செல்கிறார்கள். ஆனால், வயிறு புடைக்க கம கம கறிவிருந்து சாப்பிட்டு விட்டு, ஏப்பம் விட்டபடி வெளியே வருகின்றனர். கறி விருந்துடன், மதுபானங்களும் சப்ளை செய்யப்படுவதால், பல அதிகாரிகள் விடுப்பு எடுத்துவிட்டு, மதிய வேளையில் பலமாக ‘ஆய்வு’ நடத்துகிறார்கள். தினசரி பல லட்சம் ரூபாய்க்கு சூதாட்டம் நடக்கும் இக்கிளப்புக்கு சென்றால், வயிறும், பாக்கெட்டும் நிறையும் என்ற நம்பிக்கையுடன் காவல் அதிகாரிகள் அடிக்கடி ‘ஆய்வு’ நடத்துகிறார்கள்.


Tags : Travelers , Travelers,lamenting ...
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை