டாக்டர், மருந்து இல்லை சிற்றாறில் தடுமாறும் ஆரம்ப சுகாதார நிலையம்

மார்த்தாண்டம்: சிற்றாறு பகுதியில் அரசு ரப்பர் கழக ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. மலைப்பகுதியை மையமாக வைத்து இந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. ஆனால் இங்குள்ள கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. டாக்டரும்  இல்லை.

பத்துகாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை மட்டும் ஒரு டாக்டர் வந்து செல்கிறார். நோயாளிகளுக்கு நர்சுதான் மருந்து கொடுத்து வருகிறார். பிபி பரிசோதனை செய்யும் கருவிகூட இல்லை. மேலும் இங்கு போதிய  மருந்துகள் இல்லை. இதனால் நோயாளிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் மருந்து வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது இது நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.அரசு ரப்பர் கழகம் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சரிவர பராமரிப்பதில்லை. இருக்கும் மருந்து நோயாளியாக வரும் ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் மலையில் இருந்து வரும் மக்களுக்கு மருந்துகள்  வழங்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்க தலைவர் ரகு கூறும்போது: சிற்றாறு அரசு ரப்பர் கழக ஆரம்ப சுகாதார நிலையத்தை நிர்வாகம் சரிவர செயல்படுத்தவில்லை. இங்கு அடிப்படை வசதிகள்கூட இல்லை. மருந்துகள், டாக்டர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் நலன்கருதி ரப்பர்  கழகம் வசம் உள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு தனது பொறுப்பில் எடுத்து டாக்டர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும். மேலும் உரிய மருந்துகளை இருப்பு வைத்து, அடிப்படை வசதிகளையும் செய்து பொதுமக்கள் நலன் காக்க வேண்டும் என்றார்.

Related Stories: