திருத்தணி வட்டார போக்குவரத்து அதிகாரியின் பாஸ்வேர்டை திருடி போலி லைசென்ஸ்: கணினி ஊழியர் உட்பட 3 பேர் கைது!

திருவள்ளூர்: திருத்தணி வட்டார போக்குவரத்துக்கு அலுவலரின் பாஸ்வேர்டை திருடி போலி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை வழங்கிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். வடநாட்டு இளைஞர்களுக்கு போலி லைசன்ஸ் வழங்கி ஏராளமான அளவிற்கு பணம் பெற்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக அலுவலகத்தில் தரகராக செயல்பட்டிருந்த ஒருவரும் அவருடைய நண்பர்கள் இருவர் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இயங்கி வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போலி சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் ஆர்டிஓ ஜெயபாஸ்கர் என்பவர் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்திடம் புகார் செய்தார்.

இந்த புகார் தொடர்பாக அவர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போது, திருத்தணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முன்னாள் தரகராக செயல்பட்டு வந்த ராபர்ட் என்கிற ராஜா தற்பொழுது ஆண்டான் என்ற நிறுவனத்தின் மூலம் கணினி உதவி அலுவலராக அதே ஆர்டிஓ அலுவலகத்தில் பணியில் சேர்ந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். அவருடைய கூட்டாளிகளான திருவண்ணாமலையை சேர்ந்த விஷ்ணு, சக்திவேல் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் வகுத்து, போலி உரிமம் வழங்குவது, புதுப்பித்தல் என ஆர்டிஓ அலுவலகத்தில் செய்யும் பணிகளை தனியாக செய்து வந்திருக்கின்றனர்.

இந்த பணிகளுக்காக அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஆய்வாளர் நமீதா பானு என்பவரிடம் இருந்து password-ஐ எடுத்துள்ளனர். பெண் ஆய்வாளர் நம்பிக்கையின் அடிப்படையில் password - ஐ கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி 3 பேரும், வடநாட்டு இளைஞர்கள், வெளிமாநில குடும்பத்தினருக்கு போலி ஆவணங்களை தயாரித்து தந்துள்ளனர். விசாரணையில் இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து எஸ்.பி-யின் உத்தரவின் பேரில் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: