சிறுபான்மையினரை பற்றி நான் தவறாக பேசியதாக பரப்பப்படும் தகவல்கள் உண்மையில்லை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: சிறுபான்மையினரை பற்றி தவறாக பேசியதாக வெளியான செய்திக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் செய்த போது தன்னை சந்திக்க வந்த இஸ்லாமியர்களிடம் தவறாக பேசவில்லை என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் தன்னிடம் பேச வந்தவர்கள் சரியாக பேசவில்லை என்றும் தான் வளர்ந்து வருவதை தடுக்க சதி செய்கிறார்கள் என்று ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Advertising
Advertising

சிறுபான்மையினரை பற்றி தவறாக பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் வாக்குச் சேகரிக்கச் சென்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சந்தித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியத் தோழர், ஜமாத்தை சேர்ந்த சிலரை அழைத்துக் கொண்டு கோரிக்கை மனு வழங்கினார்.அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அந்த இஸ்லாமிய மக்களிடம் உங்களுக்கு நாங்கள் ஏன் உதவ வேண்டும்?  நீங்கள் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீர்கள்;  அதைப்போல, கிறித்தவர்களும் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஜமாத்தினர் மற்றும் பாதிரியார்கள் எங்களுக்கு வாக்களிக்க கூடாது என்று சொல்லியிருப்பார்கள்.  உங்களிடம் நான் மனு வாங்க மாட்டேன். உங்களையெல்லாம் காஷ்மீரில் செய்ததைப் போல ஒதுக்கி வைக்க வேண்டும்  என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி கடுமையாகப் பேசியுள்ளார். இதற்கு தமிழகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்ததுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விளக்கம்

இந்நிலையில் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கருவேலங்குளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இஸ்லாமியர்களை பற்றி தான் தவறாக பேசியதாக பரப்பப்படும் தகவல்கள் உண்மையில்லை என்று கூறினார்.மேலும் அவர் பேசியது பின்வருமாறு ,கடந்த 16-ம் தேதி இரவு நாங்குநேரி தொகுதியில் நான் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியே கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது 3 பேர் வந்து ரேஷன் கடையை பிரித்து தர வேண்டும் என என்னிடம் கேட்டனர். அதற்கு நீங்கள் தாசில்தாரிடம் மனு கொடுங்கள். அதன் நகலை என்னிடம் கொடுங்கள் என்று பதில் சொன்னேன். ஆனால், அவர்கள் ரேஷன்கடையை பிரித்து தர முடியுமா, முடியாதா என்பதை இப்போதே சொல்லுங்கள் என்றனர். அவர்கள் பேச்சு சரியில்லாததால் நாளைக்கு வாருங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தேன்.ஆனால் நான் இஸ்லாமிய சமுதாயத்தை தவறாக பேசியதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல் என்று கூறினார்.

Related Stories: