மத்திய அரசு தொடர்புடைய 5 லட்சத்து 3,450 வழக்குகள் தேக்கம்.. வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்

டெல்லி : அரசு தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். தென் மாநிலங்களின் மத்திய அரசு வழக்கறிஞர்கள் மூன்றாவது கருத்தரங்கம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. இந்த கருத்தரங்கை துவங்கி வைத்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், நீதி எது, அநீதி எது என்பது எப்போதும் விவாதத்துக்குள்ளான விஷயமாகவே உள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும் அரசு சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், அரசு சம்பந்தப்பட்ட வழக்குகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அவர், நாடு முழுவதும் 2,768 நீதிமன்றங்களில், 66 மத்திய அமைச்சகங்கள் தொடர்புடைய 5 லட்சத்து 3,450 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டிய அவர், மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, சட்ட ஆணையம், 1998ல் தன் 126வது அறிக்கையில்  பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது எனவும், அது கடந்த 20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வழக்குகள் எண்ணிக்கையை குறைக்க மாற்று தீர்வு முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், அரசு துறைகள் மேல் முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் வழக்குகளின் எண்ணிக்கையையும்  மத்திய அரசுத்துறைகள் எடுத்துவரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டார். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சம்பந்தப்பட்ட 7,450 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்குகளும், 4 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான சமரச வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத்கோத்தாரி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் மற்றும் தென் மாநிலங்களின் மத்திய அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: