ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அரசாணை பிறப்பிப்பு : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சென்னை : ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.ஊட்டியில், மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, நீலகிரி மாவட்ட மக்களின் வசதிக்காக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைத்தது குறித்தும், ஏர் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கு, 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து அக்டோபர் 11-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ஏர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்தி, விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

ஊட்டியில் புதிய மருத்துவ கல்லுாரி அமைக்க மக்கள் பல நாட்களாக கோரிக்கை  

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் மருத்துவத்திற்கான உயர் சிகிச்சை பெற கோவை மற்றும் மைசூரு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விபத்துகளில் சிக்குவோர் உரிய நேரத்திற்குள் மருத்துவமனை செல்ல முடியவில்லை.இதனால் ஊட்டியில் புதிய மருத்துவ கல்லுாரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஊட்டியில் மருத்துவ கல்லாரி அமைக்க மாநில அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:ஊட்டியில் அமைய உள்ள புதிய மருத்துவ கல்லுாரியில் குறைந்தது 300 படுக்கை வசதி இருக்க வேண்டும் என்பதால் ஊட்டி போட்டோ பிலிம் தொழிற்சாலையில் மாநில அரசுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு வரைப்படத்துடன் அரசுக்கு அறிக்கை அனுப்பபட்டுள்ளது. தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: