அக்.19 நாமக்கல் கவிஞர் பிறந்தநாள் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது!

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர், தேசியப் போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றவர், ராஜாஜியின் மனதுக்குகந்த தோழர், உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் வழிநடைப் பாடலாக ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ எனும் பாடலை எழுதிப் புகழ் பெற்றவர், இந்த பெருமைகளுக்கெல்லாம் உரிய நாமக்கல் கவிஞர் எனப்படும் ராமலிங்கனார் பிறந்தநாள் இன்று.

இவர் 1888 அக்டோபர் 19ம் தேதி கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூர் எனும் ஊரில் ஹெட் கான்ஸ்டபிளாக இருந்த வெங்கட்டராமர்- அம்மணி அம்மாள் தம்பதியருக்கு எட்டாவதாக பிறந்தார்.

இவர் நாமக்கல் நம்மாழ்வார் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் தந்தை கோவைக்கு மாற்றலாகிச் சென்றபோது கோவையில் உயர்நிலைக் கல்வி பயின்றார். திருச்சியில் கல்லூரி படிப்பைத் தொடர்ந்த இவர் தனது அத்தை மகளை 1909ல் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆசிரியர் தொழில் உட்பட பல தொழில்களில் சேர்ந்தாலும் ஒன்றிலும் நிலைக்கவில்லை. இவருக்கு இயற்கையிலேயே ஓவியம் வரையும் ஆற்றல் இருந்தது. ஓவியம் தவிர இவருக்கு கவிதை புனையும் ஆற்றலும் இருந்தது.

1924ம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளை புனைந்து தள்ளினார். குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930ல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய “கத்தியின்றி” பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவருக்கு 1906ம் ஆண்டு முதலே நாட்டுச் சுதந்திரத்தில் வேட்கை பிறந்தது. இவர் கரூரில் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1914ல் திருச்சி மாவட்ட காங்கிரசின் செயலாளராக இருந்தார். கரூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பணிபுரிந்தார். 1921 முதல் 1930 வரை நாமக்கல் காங்கிரசின் தலைவராக இருந்தார். கரூர் அமராவதி நதிக்கரையில் இவர் அடிக்கடி கூட்டங்கள் நடத்தினார்.

சுதந்திரப் போராட்டத்தில் முதன் முதலாக 1932ல் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. சுதந்திரம் நெருங்கி வந்த சமயத்தில் இவரது கவிதைகள் பெரும் புகழ்பெற்று தமிழ் மாநிலமெங்கும் இவருக்குப் பாராட்டும் புகழும் ஈட்டித் தந்தன. 1945ல் இவரைப் பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் காமராஜ், திரு.வி.க., பி.ராமமூர்த்தி, கல்கி போன்றவர்கள் கலந்து கொண்டனர். இவர் எழுதிய “மலைக்கள்ளன்” எனும் நெடுங்கதை கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்- பானுமதி நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949ல் ஆகஸ்ட் 15 சுதந்திர திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு ‘அரசவைக் கவிஞர்’ எனும் பதவி வழங்கப்பட்டது. 1956ம் ஆண்டிலும் பின்னர் 1962ம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971ல் இவருக்கு டெல்லியில் ‘பத்மபூஷன்’ விருது வழங்கப்பட்டது. ‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகபத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர் எழுதிய “காந்தி அஞ்சலி” எனும் கவிதைத் தொகுதி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் 1972ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி இரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பாரதிக்குப் பிறகு தோன்றிய ஒரு தேசியக் கவிஞரின் ஆயுள் அன்றுடன் முடிந்துவிட்டது. ஆனால் அவர் ஊட்டிய தேச பக்தியும், தமிழ் பற்றும் இன்றுவரை வாழ்கிறது.

Related Stories: