மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குழித்துறை சப்பாத்து பாலத்தில் பொதுமக்கள் செல்ல தடை

மார்த்தாண்டம்  : குமரி  மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை மழையை தொடர்ந்து, தென்மேற்கு பருவ மழையும் கைகொடுத்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி  உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மழை தொடர்ந்து விடிய விடிய  பெய்தது. மழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குளங்கள்  உள்பட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளுக்கும் நீர்வரத்து  அதிகரித்துள்ளது. கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திற்பரப்பு  அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

 இதேபோல குழித்துறை  தாமிரபரணி ஆறும் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை சப்பாத்து பாலத்தை  மூழ்கடித்து தண்ணீர் பாய்கிறது. மார்த்தாண்டம் வெட்டுவெந்நியில் இருந்து  குழித்துறை தபால் நிலைய சந்திப்பு வழியாக செல்ல வேண்டிய இருச்சக்கர வாகன  ஓட்டிகள் பலரும் சுற்றிச்செல்வதை தவிர்க்க குழித்துறை சப்பாத்து பாலத்தை  பயன்படுத்தி வந்தனர்.  

பொதுமக்களும் இந்த வழியாக நடந்து செல்வதும் வழக்கம். இந்த  நிலையில் வெள்ள பெருக்கால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, வாகனங்கள் செல்ல முடியாதவாறு  அதிகாரிகள் சப்பாத்து பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு வைத்து  அடைத்துள்ளனர். கடந்த காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சப்பாத்து  பாலம் வழியாக சென்றவர்கள் தவறி ஆற்றில் விழுந்து உயிரிழந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: