சேலத்தில் உள்ள இனிப்புக்கடையில் இருந்து 3 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்தார் மாநகராட்சி ஆணையர்

சேலம்: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சேலம் மாவட்டத்தில் 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சேலத்தில் லாலா ஸ்வீட்ஸ் என்ற இனிப்புக்கடையில் பதுக்கிவைத்திருந்த 3 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இனிப்பு கடைக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதில், பிளாஸ்டிக் பைகள், பேப்பர் கப்கள், பாலிஸ்டிக் தட்டுகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் குறைந்தபாடில்லை.

பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றன. இந்த நிலையில், சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தலைமையில் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலத்தில் தேர்வீதி அருகே மிகவும் பிரபலமான லாலா இனிப்பு கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் உள்ள பலகாரங்களை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளையே கொடுத்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் அந்த குடோனில் ஆய்வு மேற்கொண்டார். அதில், சுமார் 3 டன் அளவுக்கு பிளாஸ்டிக் பைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இனிப்புக்கடை உரிமையாளருக்கு 2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளார். ஏற்கனவே, சேலத்தில் 50 டன் அளவிற்கு பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: