பராமரிப்பின்றி காணப்படும் திருவதிகை அணைக்கட்டு

*விவசாயிகள் வேதனை

பண்ருட்டி :  பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் அணைக்கட்டு உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணைக்கட்டின் மூலம் திருவதிகை, முத்துநாராயணபுரம், எழுமேடு, நரிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 6465 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளித்து வருகிறது. இதனை நம்பி விவசாயிகளும் தங்கள் நிலத்தில் பல்வேறு விவசாய பொருட்களை பயிர் செய்து வருகின்றனர். அணைக்கட்டின் பிரதான வாய்க்கால் மூலம் ஏரி, குளங்களுக்கு பாசன வசதி பெறும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள அணைக்கட்டின் ஆற்று பகுதியில் கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது. அணைக்கட்டின் மதகுகள் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது.  

அணைக்கட்டிற்கு செல்லும் தார்சாலை முழுவதும் சேதமடைந்து பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தமிழக அரசு அனைத்து பகுதியிலும் முட்புதர்களை அகற்றி தூர்வார வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த அணைக்கட்டில் எந்த புனரமைப்பு பணியும் செய்யப்படவில்லை. கடந்த 8 ஆண்டிற்கும் மேலாக இந்த அணைக்கட்டு சீரமைக்கப்படாமல் உள்ளது என இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, அணைக்கட்டை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: