ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி ரூ.1 கோடி கடல் அட்டை பறிமுதல்

*மூன்று பேர் கைது

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டையை பறிமுதல் செய்த வனத்துறையினர், மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து படகில் கடல் அட்டைகள் கடத்திச் செல்லவுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக ரேஞ்சர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் நேற்று ராமேஸ்வரத்தில் பல இடங்களில் சோதனை செய்தனர். ராமேஸ்வரம் புலித்தேவன் நகர் பகுதியில் தோப்பு ஒன்றில் சோதனையில் ஈடுபட்டபோது,  அங்கு மூன்று பிளாஸ்டிக் கேன்களில் 150 கிலோ எடையுள்ள கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

இலங்கைக்கு கடத்துவதற்கு தயாரான வகையில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராமேஸ்வரம் புலித்தேவன் நகரை சேர்ந்த முருகேசன் (37), முருகையா (61), சக்திவேல் (35) ஆகியோரை கைது செய்தனர். வனத்துறையினரால் கைப்பற்றப்பட்ட கடல் அட்டையின் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது. உள்ளூர் சந்தை மதிப்பு ரூ.40 லட்சமாகும்.

 கடல் அட்டை தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரையும் மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கடல் அட்டைகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏஜென்சிகள் ஒருங்கிணைந்த நடவடிக்கையினால் மட்டுமே இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: