ரூ.250 கோடியில் புதிய பாலம் பாம்பன் தூக்குப் பாலத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு

ராமேஸ்வரம் : பாம்பன் கடலில் ரூ.250 கோடியில் புதிய  பாலம் கட்டுவது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் குழுவினர் தற்போதுள்ள ஷெர்ஜர் ரயில் பாலத்தை பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தனர். ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் கடலில் தற்போது  பயன்பாட்டில் உள்ள ரயில் பாலம் நூறு ஆண்டுகளை கடந்துவிட்டது. இதனால் வேகமான ரயில்  போக்குவரத்து, சரக்கு போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் ரூ.250 கோடி மதிப்பில்  புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பாம்பன் கடலில் இரட்டை வழித்தடத்துடன் மின்சார ரயில்களை இயக்கும் வகையில்  புதிய ரயில்பாலம் கட்டப்படவுள்ளது.

 இதற்கான ஆய்வுகள் முடிக்கப்பட்ட  நிலையில் தற்போது பாலம் கட்டுவதற்கு டெண்டர் எடுத்துள்ள குஜராத் தனியார்  நிறுவன ஊழியர்கள் கடந்த 20 நாட்களாக பாம்பன் கடலில் சர்வே செய்து  வருகின்றனர். நேற்று ராமேஸ்வரம் வந்த ரயில் பொறியியல் பிரிவு,  கணக்கு மற்றும் தணிக்கை பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர்  தனுஷ்கோடியில் ரயில் போக்குவரத்திற்காக ரூ.150 கோடியில் புதிய ரயில்பாதை  அமைப்பது தொடர்பாகவும், பாம்பன் கடலில் ரூ.250 கோடியில் புதிய பாலம்  கட்டுவது தொடர்பாகவும் ஆய்வு செய்தனர்.

தனுஷ்கோடியில் ரயில்நிலையம் கட்டும்  இடத்தை பார்வையிட்டபின் பாம்பன் சென்ற அதிகாரிகள் குழுவினர் பாம்பன் ரயில்  பாலத்தில் கப்பல் செல்லும்போது திறக்கும் ஷெர்ஜர் தூக்குப்பாலத்தை  பார்வையிட்டு பாலம் திறந்து மூடுவதையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து  பாலத்தில் பணியாற்றும் பராமரிப்பு பணியாளர்களிடம் விபரங்கள் கேட்டறிந்தபின்  பாலத்தின் தூண்கள், தண்டவாளங்களில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கருடர்கள்  போன்றவற்றையும் பார்வையிட்டு திரும்பினர்.

Related Stories: