நடுரோட்டில் விபத்து ஏற்படுத்தி காங். எம்எல்ஏ.வை கொல்ல முயன்ற வாலிபர்

பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏ. பைரதி சுரேஷை கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு  ஹெப்பால் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பைரதி சுரேஷ். நேற்று காலை இவர் , கட்சி பணிக்காக கொத்தனூர் பகுதியை நோக்கி காரில் சென்று  கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், நேராக வந்து அவருடைய கார் மீது மோதினார். காரில் இருந்தவர்கள் இறங்கி வந்து, வாலிபருக்கு  என்ன ஆனது என்று பார்த்தனர். அப்போது கீழே  கிடந்த வாலிபர் திடீரென  எழுந்து, பைரதியை நோக்கி வேகமாக  ஓடி வந்தார். அவருடைய கழுத்தை நெறிக்க முயன்றார். கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்த முயன்றார். பைரதியின்  பாதுகாவலர், வாலிபரை மடக்கி பிடித்தார். இதனால்,  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் வாலிபரை கைது செய்து  விசாரித்தனர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என  தெரியவந்தது. இது குறித்து பைரதி சுரேஷ் கூறுகையில், ‘‘சிவகுமாரின் தாய் என் வீட்டில்தான் வேலை பார்த்து  வந்தார்.சொந்த வீடு கூட அவர்களுக்கு கட்டி கொடுத்துள்ளேன். சிவகுமாரும்  நல்லவர்தான். ஆனால்,எதற்காக என்னை கொலை செய்ய முயற்சித்தார் என  தெரியவில்லை. கடந்த சில நாட்களாக சிவகுமார் எனது வீட்டின் முன்பு  நடமாடியதாக தகவல்கள் கிடைத்தது. அதை  நான் பெரிதாக நினைக்கவில்லை. தற்போது,  கொலை செய்ய முயன்ற பின்னர்தான் அவர், எனது நடவடிக்கையை நோட்டமிட்டுள்ளார்  என்பது தெரியவந்துள்ளது. ஆனால் எதற்காக என்னை கொலை செய்ய முயன்றார் என்பது  தெரியவில்லை. போலீசார்  விசாரணை நடத்தினால்தான் உண்மை என்னவென்பது  தெரியவரும்,’ என்றனர்.

Related Stories: