எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத வலியால் துடிக்கும் எதிர்க்கட்சிகள்: அரியானாவில் மோடி பிரசாரம்

கோகனா: ‘‘எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத வலியால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் துடித்து வருகின்றன,’’ என அரியானாவில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. அதற்கான பிரசாரம் இன்றுடன் ஓய்வுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி கோகனா, ஹிசார் ஆகிய 2 இடங்களில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:தேச நலனுக்கான முடிவுகளை நான் எடுக்க வேண்டுமா, கூடாதா? தேச நலன் என்பது அரசியலுக்கும் அப்பாற்பட்டதா, இல்லையா? ஆனால், காங்கிரசால் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு வீரர்களின் தியாகத்திற்கும் மதிப்பளிக்க தெரியாது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி யாருமே எதிர்பார்க்காத நிகழ்வு நடந்தது. ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. 70 ஆண்டாக அம்மாநில வளர்ச்சிக்கு இருந்த முட்டுக்கட்டை அகற்றப்பட்டது.

அப்போது முதல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மிகுந்த வலியை துடித்து கொண்டிருக்கின்றன. அதை எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது. தூய்மை இந்தியா, சர்ஜிக்கல் தாக்குதல் பற்றி பேசும்போது இதே நோயால் அவதிப்படுகிறார்கள். பாலகோட் என சொன்னாலே அவர்களின் வலி அதிகரிக்கிறது. காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசியதை அப்படியே பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்கிறது. உலக அரங்கில் இந்தியாவுக்கு எதிராக குற்றம்சாட்ட, காங்கிரஸ் தலைவர்களின் பேச்சை அவர்கள் உபயோகிக்கிறார்கள். இது என்ன மாதிரியான கெமிஸ்ட்ரி? இதற்கெல்லாம் இந்த தேர்தல் பதில் தரும். நீங்கள் என்னை பற்றி தவறாக எது வேண்டுமானாலும் கூறுங்கள். ஆனால், நாட்டுக்கு தீங்கு விளைவிப்பதில் எல்லை மீறாதீர்கள். காங்கிரசுக்கு நாட்டின் ஒற்றுமை பற்றியும், அம்பேத்கரின் அரசியலமைப்பை பற்றியும் துளி கவலையில்லை. இந்த தேர்தலில், மக்களாகிய நீங்கள் அவர்களுக்கு ஓய்வு கொடுங்கள். அவர்கள் நாட்டை ரொம்பவே கெடுத்தவர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

‘அவருக்குதான் புரியாது:

அரியானாவின் மகேந்திரகாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது பிரசாரத்தில், ‘‘ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவை சிறு, குறு தொழில்களை அழித்து விட்டன. உலகமே இன்று இந்தியாவை கேலி செய்கிறது. அன்புடன் வாழவும், வேகமாக வளர்ச்சிக்கான பாதையையும் உலகுக்கு காட்டிய இந்தியா இன்று ஒரு சாதி மற்றவர்களுடன் சண்டை போடுகிறது. ஒரு மதம் மற்றவர்களுடன் மோதிக் கொண்டிருக்கிறது. நாட்டின் பெருமை, பொருளாதாரத்தை பிரதமர் மோடி அழித்து விட்டார். பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லாதவர் அவர். உண்மையை பேச மீடியாக்கள் அஞ்சுகின்றன. மீறி பேசினால், அவர்களின் வேலை பறிபோய் விடும்,’’ என்றார்.

Related Stories: