மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி வருகை: அமெரிக்காவில் நுழைய முயன்றவர்கள்

புதுடெல்லி; மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவில்  சட்ட விரோதமாக நுழைய காத்திருந்த 311 இந்தியர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் டெல்லி வந்தனர். அமெரிக்கா எல்லையில் உள்ள மெக்சிகோ வழியாக பல்வேறு நாட்டினர் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து வருகின்றனர். இதை தடுக்க இருநாட்டு எல்லையில் தடுப்பு சுவர் கட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.  சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் மக்களை மெக்சிகோ தடுக்காவிட்டால், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என டிரம்ப் கடந்த ஜூனில் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, எல்லையில் மெக்சிகோ பாதுகாப்பை பலப்படுத்தி கண்காணித்து வருகிறது.

 இந்நிலையில், எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவ காத்திருந்த 311 இந்தியர்களை மெக்சிகோ அரசு நேற்று முன்தினம் கைது செய்தது. பின்னர் அவர்களை தனி விமானம் மூலம், டெல்லிக்கு நாடு கடத்தியது. இது தொடர்பாக மெக்சிகோ தேசிய குடிபெயர்வோர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘மெக்சிகோவில் நிரந்தரமாக தங்க ஆவணம் இல்லாத இந்தியர்கள் 311 பேர் டொலுகா நகர சர்வதேச விமான நிலையம் மூலம் போயிங் 747 விமானத்தில் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் ஒருவர் பெண். இவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்,’ என கூறப்பட்டுள்ளது. நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்களும், டெல்லி விமான நிலையத்தில்  வந்திறங்கிய பிறகு, தங்கள் மாநிலத்துக்கு செல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு அதிகாரிகளும்  உதவி செய்யவில்லை.

மெக்சிகோவில் முதல்முறை

அமெரிக்காவுக்கு செல்வதே இந்தியர்கள் பெரும்பாலாேனாரின் கனவாக உள்ளது. முறையாக செல்ல முடியாதவர்கள், தரகர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அண்டை நாடான மெக்சிகோ செல்கின்றனர். அங்கிருந்து சட்ட விரோதமாக எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவுகின்றனர். இதை தடுக்க அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர் விடுத்த எச்சரிக்கை காரணமாகவே,  மெக்சிகோ முதல்முறையாக அதிரடி சோதனை நடத்தி தங்கள் நாட்டில் பதுங்கி அமெரிக்காவுக்குள் நுழைய காத்திருந்த இந்தியர்களை சொந்த நாட்டுக்கு நாடு கடத்தியுள்ளது.

Related Stories: