பண மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்ப முயன்றபோது விமான நிலையத்தில் இருந்து தொழிலதிபர் காரில் கடத்தல்

* 4 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்

* நண்பர்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை

சென்னை: சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் செல்வச்சந்திரன் (32), தொழிலதிபர். இவர், புதிதாக ஒரு தொழில் தொடங்குவதாகவும், அதில் பங்குதாரர்களாக இணைந்தால் லாபத்தில் பங்கு கிடைக்கும் என்றும் தனது நண்பர்களான ஹரீஸ் (25), கணேஷ் (26), ஷாம் (26) ஆகியோரிடம் கூறியுள்ளார். இதை நம்பி நண்பர்கள் 3 பேரும் தலா 20 லட்சம் வீதம் செல்வச்சந்திரனிடம் கொடுத்தனர். ஆனால் செல்வச்சந்திரன் கூறியபடி லாபத்தில் பங்கு தரவில்லை. இதனால் ஹரீஷ், கணேஷ், ஷாம் ஆகிய மூவரும், தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால், அதையும் திருப்பி தராததால், அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட 3 பேரும் சென்னை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதுபற்றி அறிந்த செல்வச்சந்திரன் வெளிநாடு தப்பிச் செல்ல முடிவு செய்தார்.

அதன்படி, நேற்று அதிகாலை 1.30 மணிக்கு மலேசியா செல்ல டிக்கெட் எடுத்து இருந்தார். இதையடுத்து, வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு காரில் சென்னை விமான நிலையம் புறப்பட்டார். காரை டிரைவர் பவித்திரன் (28) ஓட்டி வந்தார். இதுபற்றி அறிந்த ஹரீஷ், கணேஷ், ஷியாம் ஆகியோர், உடனடியாக சென்னை சர்வதேச விமான நிலைய கார் பார்க்கிங் பகுதிக்கு வந்த காத்திருந்தனர். செல்வச்சந்திரன் கார் வந்து நின்றதும், மறைந்திருந்த மூன்று பேரும், அவரை மடக்கி பிடித்தனர். பின்னர், கார் டிரைவரை இழுத்து வெளியே போட்டுவிட்டு, அவரது காரிலேயே செல்வச்சந்திரனை கடத்தினர். வழியில் பணத்தை திருப்பி கேட்டு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து கார் டிரைவர், விமான நிலைய போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வச்சந்திரன் செல்போன் மற்றும் அவரது காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணித்தனர்.

அதில், கார் சென்னை அண்ணாநகர், திருமங்கலம் பகுதியில் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, திருமங்கலம் போலீசார் நேற்று அதிகாலை 4 மணிக்கு காரை சுற்றிவளைத்து, 4 பேரையும் பிடித்து சென்னை விமான நிலையம் அழைத்து வந்தனர். அப்போது, வங்கிய பணத்தை திருப்பி தராமல் வெளிநாடு தப்ப முயன்றதால் செல்வச்சந்திரனை கடத்தினோம், என 3 பேரும் தெரிவித்தனர். அதற்கு விமான நிலைய போலீசார், இதுபற்றி எங்களிடம் புகார் தர வேண்டுமே தவிர நீங்களாக கடத்திச் செல்வது தவறானது, என்று கூறினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>