×

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 3 தனியார் நிறுவனங்களுக்கு தலா 1 லட்சம் அபராதம்: சுகாதாரத்துறை நடவடிக்கை

திருவொற்றியூர்: டெங்கு கொசு புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த  3 தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தலா 1 லட்சம் அபராதம் விதித்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், காய்ச்சல், மர்ம காய்ச்சல் போன்றவைக்கு  பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் குடியிருப்பு, தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்காமல்   டெங்கு   கொசுப்புழு உற்பத்தியாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் முருகன் தலைமையில் சுகாதார அதிகாரி இளஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் நேற்று எண்ணூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் சோதனை நடத்தினர். அப்போது எண்ணூரில் உள்ள 3 தனியார் நிறுவனங்களை சோதனையிட்டபோது அங்கு பயன்படுத்தாத பிளாஸ்டிக் பைகள், தொட்டிகள் போன்றவற்றை வைத்திருந்தனர். இதில், டெங்கு கொசு புழு உற்பத்தியாவது கண்டறியப்பட்டதால், இவற்றை உடனடியாக  அப்புறப்படுத்த வேண்டும் என்று தொழிற்சாலையின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மாநகராட்சி அதிகாரிகள், மேற்கண்ட மூன்று தொழிற்சாலைகளுக்கும் தலா 1 லட்சம் வீதம் 3 லட்சம் அபராதம் விதித்தனர்.

மருத்துவமனைக்கு 50,000 அபராதம்
தாம்பரம் நகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையா ராஜா தலைமையில் நேற்று நடந்தது. சுகாதார அலுவலர் மொய்தீன், ஆய்வாளர்கள் ஆல்பட் அருள்ராஜ், சிவகுமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். அப்போது, மேற்கு தாம்பரம் துரைசாமி தெருவில் ஆய்வில் ஈடுபட்டபோது அங்குள்ள எஸ்.கே.நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனையில் டெங்கு கொசு புழு உற்பத்தியாவது தெரியவந்தது. அருகில் உள்ள தனியார் கட்டிடத்திலும் டெங்கு கொசு புழு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்திற்கு 50 ஆயிரம், தனியார் கட்டிடத்திற்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : companies ,Rs. 3 , Dengue Mosquito, 3 Private Companies, Fines, Health Sector
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!