பூமியை சுற்றும் சர்வதேச ஆய்வு மையத்தில் இருந்து விண்வெளியில் முதல்முறை 2 பெண்கள் நடந்து சாதனை

வாஷிங்டன்: விண்வெளியில் முதல்முறையாக 2 வீராங்கனைகள் மட்டுமே அடங்கிய குழு நடந்து சாதனை படைத்துள்ளனர். பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனைகள் சுழற்சி முறையில் தங்கி ஆய்வு பணி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, சர்வதேச விண்வெளி மையத்தில் 4 ஆண்களும், 2 பெண்களும் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். கிரிஸ்டினா கவுச், ஜெசிகா மேர் என்ற இரு பெண்களும் அமெரிக்காவின் நாசா மையத்தை சேர்ந்தவர்கள். சர்வதேச விண்வெளி மையத்தில் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ளும்போது, அங்கு தங்கியிருக்கும் வீரர்கள், விண்வெளி நடை பயணம் மேற்கொள்வார்கள். இதுவரை 420 முறை விண்வெளி நடை பயணம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஆண் வீரர்கள் அதிகளவில் விண்வெளி நடை பயணம் மேற்கொண்டு பழுது பார்த்துள்ளனர். ஆண்களுடன் சேர்ந்து வீராங்கனைகள் விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட சம்பவம் மிக குறைந்த அளவிலேயே நடந்துள்ளது. கடந்த 1984ம் ஆண்டு ரஷ்ய வீராங்கனை முதல் முறையாக ஆண் வீரருடன் இணைந்து விண்வெளி நடை பயணம் மேற்கொண்டார். ஆனால், பெண்கள் மட்டுமே அடங்கிய குழு விண்வெளி நடை பயணம் மேற்கொண்டு பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட சம்பவம் நேற்று முதல் முறையாக நடந்தது. இது 421வது விண்வெளி நடை பயணம். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரான கிறிஸ்டினா கோச்சும், ஜெசிகா மேரும் நேற்று சர்வதேச விண்வெளி மையத்தை விட்டு வெளியே வந்து பேட்டரி சார்ஜர் கருவியை (பிசிடியு) மாற்றினர்.

சூரிய மின்சக்தி மூலம்தான் விண்வளி மையத்துக்கு மின்சாரம் கிடைக்கிறது. சூரிய ஒளி இல்லாத நேரத்தில், அதில் உள்ள பேட்டரி சார்ஜர்கள் மூலம் மின் சப்ளை கிடைக்கும். பழுதடைந்த பேட்டரி சார்ஜரை நேற்று இவர்கள் மாற்றினர்.

வீராங்கனைகள் மட்டுமே விண்வெளி நடைபயணம் மேற்கொள்ளும் திட்டம் கடந்த மார்ச் மாதமே திட்டமிடப்பட்டது. ஆனால்,  நடுத்தர ரக விண்வெளி உடை பற்றாக்குறையாக இருந்ததால் இத்திட்டம் கைவிடப்பட்டது. நேற்று 2 வீராங்கனைகளும் வெற்றிகரமாக விண்வெளி நடைபயணம் மேற்கொண்டு பேட்டரியை மாற்றி புதிய சாதனை படைத்துள்ளனர்.

Related Stories:

>