டாக்டரிடம் 40 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது சிக்கினார் மயிலாப்பூர் சார் பதிவாளர் அதிரடி கைது

*  80 லட்சத்துக்கு ஏலம்போன சைதாப்பேட்டை பதிவு அலுவலகத்திலும் ரெய்டு

* தீபாவளி வசூலில் ஈடுபட்டதால் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னையில் நிலத்தை பதிவு செய்ய டாக்டரிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாப்பூர் சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் 80 லட்சத்துக்கு ஏலம்போன சைதாப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் வில்லிவாக்கம், ஸ்ரீரங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்திலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டன. சென்னையில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பணி மாறுதலுக்கு பல லட்சம் பணம் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் லஞ்சமாக வழங்கப்படுவதாக தொடர் புகார்கள் வந்தன. அதேபோல், சென்னையில் அதிகளவில் பத்திரப்பதிவு நடக்கும் இடங்களில் பணிமாறுதலுக்கு 1 கோடி வரை லஞ்சம் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதில் அதிகபட்சமாக சைதாப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலக பதிவாளர் பணிக்கு 80 லட்சம் வரை கோட்டையில் ஏலம் விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து தினகரன் நாளிதழில் விரிவான செய்திகள் வெளியாகின. இதனால் தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே மயிலாப்பூர் சார் பதிவாளர் முத்துகண்ணன், மயிலாப்பூரை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை பதிவு செய்ய ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. சார் பதிவாளர் முத்துகண்ணன் லஞ்சம் கேட்ட ஆடியோவுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் டாக்டர் புகார் அளித்தார். அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பிகள் பாஸ்கரன், குமரகுருபரன் ஆகியோார் தலைமையில் 15 பேர் கொண்ட குழு நேற்று மாலை தேனாம்பேட்டையில் உள்ள மயிலாப்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சார் பதிவாளர் முத்துகண்ணன் இடைத்தரகரிடம் 40 ஆயிரம் பணம் வாங்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிடித்தனர். இதையடுத்து 40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்து சார் பதிவாளர் முத்து கண்ணனை அதிரடியாக கைது செய்தனர். மேலும், டாக்டரிடம் இடைத்தரகராக செயல்பட்ட பிரபு என்பவரையும் போலீசார் கைது ெசய்தனர்.

மேலும், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இணை சார் பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சார் பதிவாளர் ஸ்ரீதர் அறையில் இருந்து கணக்கில் வராத பல லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் கொரட்டூரில் உள்ள வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. அங்கும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர். இதுதவிர திருச்சி மாவட்டம் ரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 31 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பத்திரப்பதிவு ஊழல் அம்பலப்படுத்திய தினகரன்

தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முக்கியமான பதவிகளைப் பிடிக்க பல லட்சம் ரூபாய் லஞ்சமாக அமைச்சர்கள் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதில் சைதாப்பேட்டை, செங்கல்பட்டு, அடையாறு பத்திரப்பதிவு அலுவலக பதவியைப் பிடிக்க பலரும் போட்டி போட்டதால், கோட்டையில் அதிகார மையத்தில் உள்ளவருக்காக அவரது நண்பர் ஒருவர் அண்ணாநகரில் முக்கிய பதவிகளை ஏலம் விடுவதாகவும் புகார்கள் எழுந்தன. அங்கு சைதாப்பேட்டைக்கு ரூ.80 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில், சென்னையில் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கிய சார் பதிவாளர் ஸ்ரீதர், கோவைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அதை விட பணம் கொழிக்கும் திருப்பூருக்கு மாற்றப்பட்டார்.

வழக்கமாக லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கினால், அவர்களுக்கு மீண்டும் பதிவுத்துறை வழங்கக் கூடாது. ஆனால் ஸ்ரீதருக்கு சென்னையில் இருந்து கோவை, திருப்பூர் ஆகிய பதிவு அலுவலகத்தில் பணி வழங்கப்பட்டது. அவருக்கு பதிவு பணி வழங்கக் கூடாது என்று லஞ்ச ஒழிப்புத்துறையும் அரசுக்கு அறிக்கை கொடுத்தது. அதையும் மீறித்தான் கோட்டையில் உள்ளவர்கள் பெற வேண்டியதை பெற்றுக் கொண்டு பணி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போது, இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சைதாப்பேட்டையிலும் பதிவு அலுவலக பணி வழங்கப்பட்டது.ஸ்ரீதர் பணி மாறுதல் வாங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக திருப்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி 7 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அவருக்காகத்தான் பணத்தை வாங்கியதாக புரோக்கர் தெரிவித்தார். அப்படி இருந்தும் ஸ்ரீதருக்கு சைதாப்பேட்டை பதிவு அலுவலகத்தில் பணி வழங்கப்பட்டது. தற்போது அவர் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கியுள்ளார். இந்த முறைகேடுகளை தொடர்ந்து தினகரன் நாளிதழ் அம்பலப்படுத்தி வருகிறது. ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், கோட்டையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் பணத்ைத வாங்கிக் கொண்டு செயல்படுவதால் இதுபோன்ற முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Related Stories: