தீபாவளி நெருங்கும் வேளையில் சமையல் எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு : மைதா, ரவை, கோதுமை விலையும் அதிகரிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகை வருகிற 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பலகாரங்கள் செய்ய பயன்படும் பொருட்களின் விலை உயர தொடங்கியுள்ளது. பாமாயில் (1 லிட்டர்) முதல் ரகம் 63லிருந்து 66, பாமாயில் (2ம் ரகம்) 59லிருந்து 63, தேங்காய் எண்ணெய் 210லிருந்து 230, நல்லெண்ணெய் 240லிருந்து 260 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. கடலை எண்ணெய் விலை விலை ஏறாமல் ரகத்துக்கு ஏற்றார் போல் 120, 130 என்ற விலையில் விற்கப்படுகிறது என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து, சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் வியாபாரி பி.பாண்டியராஜன் கூறியதாவது: தீபாவளி பண்டிகையால் பலகாரம் செய்ய பயன்படும் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தேவையின் அடிப்படையில்தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

ரவை 52லிருந்து 56, மைதா 33லிருந்து 35, கோதுமை 39லிருந்து 40க்கும், முந்திரி பருப்பு 630லிருந்து 650 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. ஏலக்காய் மட்டும் விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் 6000க்கு விற்றது தற்போது 3500க்கு விற்கப்படுகிறது. இட்லி அரிசி (25 கிலோ) 840லிருந்து 860க்கு விற்கப்படுகிறது. இதேபோல மற்ற அரிசி விலை (25 கிலோ மூட்டை) 50 வரை விலை அதிகரித்துள்ளது. துவரம் பருப்பு விலை கிலோவுக்கு 13, உளுந்தம் பருப்பு விலை ரூ.30 உயர்ந்துள்ளது. அதாவது துவரம் பருப்பு (முதல் ரகம்) 110, துவரம் பருப்பு (2ம் ரகம்) ₹90, உளுந்தம் பருப்பு முதல் ரகம் 120, உளுந்தம் பருப்பு (2ம் ரகம்) 90, பாசிப்பருப்பு 89, கடலை பருப்பு 70, மைசூர் பருப்பு 65, முழு முந்திரி பருப்பு ₹830, முந்திரி பருப்பு (பாதி) 650, உலர் திராட்சை 250, வெல்லம் 60க்கும் விற்கப்படுகிறது. மொத்த விலையில்தான் இந்த விலை. போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளால் 2ம், 3ம் கட்ட வியாபாரிகளிடம் 5 முதல் 10 சதவீதம் வரை கூடுதல் விலையில் பொருட்கள் விற்கப்படுகின்றன.

Related Stories: