தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிநவீன கேமராக்கள் மூலம் கொள்ளையர்கள் தீவிர கண்காணிப்பு : போலீஸ் கமிஷனர் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் கொள்ளையடிக்கும் நபர்களை பிடிக்க அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவத்துள்ளார். தீபாவளி பண்டிகை வரும் 27ம் ேததி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்க கடைகளுக்கு படையெடுத்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் சென்னையில் தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், குரோம்பேட்டை, பாடி, வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் தேவையாக பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட கடைகள் மற்றும் இனிப்பு கடைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வருகிறது.

பொதுமக்கள் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் மற்றும் வெளிமாநில கொள்ளையர்கள் விடுதிகளில் அறை எடுத்து தங்கி பணம் மற்றும் உடமைகளை கொள்ளையடித்து வருகின்றனர். கடந்த வாரம் தி.நகரில் வாடிக்கையாளர் போல் துணிக்கடையில் 40 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை கொள்ளையடித்த செங்கல்பட்டை சேர்ந்த தில் சாந்தி(43) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் தி.நகர் பகுதியில் வடக்கு உஸ்மான் சாலையில் மற்றும் ரங்கநாதன் தெருவில் 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

தி.நகரில் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் திருடர்களை கண்காணிக்கவும் இணை கமிஷனர் சுதாகர் தலைமையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, இணை கமிஷனர் சுதாகர், தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தி.நகர் பகுதியில் குற்றங்களை தடுக்கும் வகையில் மாம்பலம் மற்றும் பாண்டிபஜார் காவல் நிலையம் பகுதியில் 1200 சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே நிறுவப்பட்டு தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. கூட்ட நெரிசலில் குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக கூடுதலாக 100 கேமராக்கள் நிறுவப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காணக்கூடிய கேமரா, ஏஎன்பிஆர் கேமரா மற்றும் டிரோன் கேமராக்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த வித குற்ற சம்பவங்களும் நிகழாமல் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் பொதுமக்கள் இந்த பகுதிக்கு வந்து தங்களுக்கு தேவையானதை வாங்கி சென்றார்கள். அதைபோலவே இந்த வருடமும் சிரமம் இல்லாமல் எந்த வித குற்றங்களும் நிகழாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: