விடிய, விடிய பெய்த கனமழை நீலகிரி மாவட்டத்தில் 28 இடங்களில் மண்சரிவு

மஞ்சூர்: மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் 28 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய கனமழை விடிய, விடிய கொட்டியது. இதில் மஞ்சூர்-ஊட்டி சாலையில் குந்தாபாலம் முதல் மெரிலேண்ட் வரை 5 இடங்களில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. கெத்தை மாரியம்மன் கோயில் அருகே, முக்கிமலை உள்பட பல இடங்களில் பெரிய அளவில் மண்சரிவுகளுடன் மரங்கள் விழுந்தது. இதுதவிர, தொட்டகம்பை, மேல்குந்தா, கோலியட்டி, தாய்சோலா, கேரிங்டன், கிண்ணக் கொரை, கோரகுந்தா உட்பட 20 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதுடன், மரங்களும் விழுந்தன. ஊட்டி - குன்னூர் சாலையில் 8 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் விழுந்தும் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மஞ்சூர்- ஊட்டி, குன்னூர்,  கோவை, கிண்ணக்கொரை, பிக்கட்டி என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக அப்பர்பவானி, குந்தா, கெத்தை அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து திறந்து விடப்பட்டது. இதையடுத்து, முள்ளி, பில்லூர் பகுதிகளில் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. 4 வீடுகள் இடிந்தன: கொடைக்கானலில் நேற்றும் கனமழை கொட்டியது. இதில், இருதயபுரத்தை ஒட்டியுள்ள கொய்யாப்பாறை பகுதியில் ஜான், அருள்அம்மாள் உள்ளிட்டோரின் 4வீடுகள் இடிந்து சேதமாகின. 4 வீடுகள் சேதத்திலும் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. மழையால் வீடு சேதமடைந்தவர்கள் நிவாரண தொகை பெற்று செல்லும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொக்லைன் வாகனங்களை தடுத்த காட்டு யானைகள்: மஞ்சூர்-கோவை சாலையில் 2 ஜேசிபி மற்றும் ஒரு பொக்லைன் வாகனங்கள் மூலம் கெத்தை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 29வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவுகளை அகற்றி கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் பொக்லைன் இயந்திரத்தை மறித்தபடி நின்றது. இதைத்தொடர்ந்து வாகனத்தின் இயக்கத்தை நிறுத்திய ஓட்டுனர் அமைதி காத்தார். சுமார் 45 நிமிடங்களுக்குபிறகு வழியை மறித்த யானைகள் அங்கிருந்து சென்றது. இதன்பின், மீண்டும் பொக்லைன் மூலம் மண் சரிவுகள் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.

Related Stories: