நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு தடைகோரிய மனு தள்ளுபடி : கண்காணிப்பை தொடரவும் அறிவுறுத்தல்

மதுரை:  வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுப்பதால், நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு தடை வேண்டும் எனக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, கண்காணிப்பை தொடர வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் சங்கரசுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. மாவட்டம் முழுவதும் சமூக விரோதிகள் லாட்ஜ்களில் தங்கியுள்ளனர். 7க்கும் அதிகமான அமைச்சர்களும் தனியார் வீடுகளில் தங்கி, அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக ஒரு வாக்காளருக்கு 2 ஆயிரம் என இதுவரை 20 கோடி வரை பணம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 28 லட்சம் வரைதான் செலவிட முடியும்.

நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் இருந்த 30 வாக்களிக்கும் இயந்திரங்கள், அக். 12ம் தேதி நள்ளிரவில் நெல்லை கலெக்டர் அலுலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக ‘தினகரன்’ நாளிதழில் செய்தி வெளியானது. அமைச்சர்களும், ஆளும்கட்சியினரும் அதிகளவு கூடியுள்ளதால் அதிகாரிகளால் தன்னிச்சையாக தேர்தல் பணியாற்ற முடியவில்லை. எனவே, நாங்குநேரி இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி, ‘‘இடைத்தேர்தல் முறையாக நடக்க வாய்ப்பில்லை’’ என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘நாங்குநேரி இடைதேர்தல் நியாயமாக நடக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அதிகாரிகள் தங்களது கண்காணிப்பை தொடர வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: