லஞ்சம், ஊழலுக்காக ஐஎஸ்ஐ முத்திரை தரலாம் : அதிமுக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

விக்கிரவாண்டி: லஞ்சம், ஊழலுக்காக தமிழக அரசுக்கு ஐ.எஸ்.ஐ முத்திரை வழங்கலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று 2-ம் கட்ட பிரசாரம் மேற்கொண்டார். ஏழுசெம்பொன், கொசப்பாளையம், பழையக்கருவாட்சி ஆகியப்பகுதிகளில் மு.க.ஸ்டாலின்   திண்ணை பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘‘இந்த அதிமுக ஆட்சியில் கொள்ளை, கலெக்‌ஷன், கரப்ஷன், எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. குளத்தை தூர்வராமலேயே பில்போட்டு பணத்தை எடுக்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை கொடுக்கலாம் என எடப்பாடி பேசுகிறார். இந்த ஆட்சிக்கு ஊழல், கொள்ளை, லஞ்சம் ஆகியவற்றிற்கு தான் ஐஎஸ்ஐ முத்திரை கொடுக்கலாம்’’ என்று பேசினார். பின்னர், டி. புதுப்பாளையம், மேலக்கொந்தை, பனையபுரம், ராதாபுரம், சிந்தாமணி ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று நேற்று இரவு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

நாடாளுமன்ற தேர்தலில்  புதுவையையும் சேர்த்து 39 இடங்களில் நம்முடைய அணி பெற்றுள்ள சரித்திர வெற்றி  பெருமையானது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இப்படி ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் 3 வது கட்சியாக கம்பீரமாக அமர்ந்திருக்கிறோம். இதற்கு கோடான, கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதனை சொல்லுகிற நேரத்தில் ஒரு வேண்டுகோளையும் உங்களிடத்தில் வைக்க விரும்புகிறேன். வருகிற 21ம் தேதி  நடைபெறவுள்ள விக்கிரபாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் புகழேந்திக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தெரிவித்து சிறப்பான வெற்றியை தேடித்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாத காரணத்தால் குடிநீர், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே டெங்கு, மலேரியா பரவுகிறது. மக்கள் அவதிக்கு ஆளாகியிருக்கின்றனர். இதையெல்லாம் தெரிந்து கொள்ளவும், தீர்வு காணவும் அந்தந்த கிராமங்களுக்கு சென்று திண்ணை பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். இது ஏதோ தேர்தலுக்காக அல்ல; நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே 12  ஆயிரத்து 500க்கும்மேற்பட்ட கிராம ஊராட்சிகளை கூட்டி மக்கள் குறைகளை கேட்டோம்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி, உள்ளாட்சி தேர்தலை நாங்கள் உடனே நடத்தப்போவதாக புது புரூடா விட்டு இருக்கிறார். மேலும் தேர்தல் நடத்தாதற்கு தி.மு.க.தான் காரணம். நீதிமன்றத்தில் வழக்கு போட்டுவிட்டதாக ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யை தொடர்ந்து கூறி வருகிறார். உள்ளபடியே உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்றுதான் கழக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி வழக்கு போட்டார். இடஒதுக்கீட்டை சரி செய்து மலைவாழ்மக்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்களை முறைப்படி கணக்கெடுத்து முறையாக தேர்தலை நடத்த வேண்டுமென்றுதான் போனார். ஆனால் இதையெல்லாம் மறைத்து அபாண்டமான பொய்களை முதல்வர் தொடர்ந்து கூறிவருகிறார். எனவே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம்.  நாங்குநேரி,  விக்கிரவாண்டியில் தோல்வி பயம் வந்துவிட்டதால், ஆத்திரத்தின் உச்சாணி கொம்பிலே அமர்ந்து கொண்டு எதோ, ஏதோ பேசுகிறார். தற்போது ஜெயலிதாவின் மரணத்துக்கு காரணம் தி.மு.க.தான் என பேசியிருக்கிறார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக முதலில் கூறியவர், துணைமுதல்வர் ஓபிஎஸ்தான். ஆனால், தி.மு.க. வழக்கு போட்டதால்தான் ஜெயலலிதா இறந்து போனதாக கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறார்.

ஜெயலலிதா மீது சொத்துகுவிப்பு வழக்குகளை 1996ம் ஆண்டு போட்டவர் சுப்பிரமணியசாமிதான், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு சென்று 2016ம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது. ஜெயலலிதா உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதுகூட என்ன நடந்தது என்று யாருக்காவது தெரியுமா? ஜெயலலலிதாவுக்கும் நமக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மாநில முதல்வர் என்ற அடிப்படையில் என்ன நடந்தது என்பது நிச்சயமாக தெரிய வேண்டும். மருத்துவமனையில் தினமும் என்ன நடந்தது என்ற உண்மை செய்தி ஒருநாளாவது வெளியே வந்ததா? தினமும் நடக்கும் விஷயங்கள் குறித்து அரசு முறைப்படி செய்திக்குறிப்புகள் ஏதேனும் வெளியிட்டதா?  அதனால்தான் சொல்கிறோம், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனையை நிச்சயமாக பெற்றுத் தருவோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: