×

தேனியில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை

*நீர்வரத்து பாதைகள் அடைப்பால் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்

தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வரும் நிலையில், கண்மாய்களுக்கு நீர் வரும் பாதைகள் அடைக்கப்பட்டதால், மழைநீர் பாதை மாறிச் செல்கிறது என பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர். வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி தேனி மாவட்டத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை பெய்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிபட்டியில் 15.8 மி.மீ, அரண்மனைப்புதூரில் 10. மி.மீ, போடியில் 60.2 மி.மீ, கூடலுாரில் 62 மி.மீ, மஞ்சளாறில் 21 மி.மீ, பெரியகுளத்தில் 17.5 மி.மீ, பெரியாறு அணையில் 19.6 மி.மீ, தேக்கடியில் 31 மி.மீ, சோத்துப்பாறையில் 42 மி.மீ, உத்தமபாளையத்தில் 25.1 மி.மீ, வைகை அணையில் 6 மி.மீ, வீரபாண்டியில் 7 மி.மீ, மழை பதிவானது.

இந்த மழையால் முல்லைப் பெரியாறு, கொட்டகுடி ஆறு, வராகநதி, வைகை நதி, மஞ்சளாறு உட்பட மாவட்டத்தில் உள்ள அத்தனை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் வீரப்ப அய்யனார் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் வீரப்ப அய்யனார் ஓடையிலும், சிகு ஓடையிலும் அதிகளவு மழைநீர் வெளியேறி வருகிறது. இந்த மழைநீர் தேனி மீறுசமுத்திரம் கண்மாய், அல்லிநகரம் மந்தைக்குளம், சிறுகுளங்களுக்கு வந்து சேரும்.
இந்த குளங்கள் நிரம்பிய பின்னர் மறுகால் பாயும் தண்ணீர் வைகை அணைக்கு செல்லும்.

தற்போது தேனிக்கும் வீரப்ப அய்யனார் கோயில் மலைப்பகுதிக்கும் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளால் இந்த ஓடைகளின் வழியாக கண்மாய்களுக்கு வரும் நீர் முழுக்க அடைக்கப்பட்டு கொட்டகுடி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டு கண்மாய்களுக்கு வராமல், நேரடியாக வைகை அணைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே, நிறைந்து இருக்க வேண்டிய கண்மாய்கள் தற்போது வறண்டு காணப்படுகிறது. இதனால் தேனி மற்றும் அல்லிநகரம் பொதுமக்கள் கடும் வருத்தத்தில் உள்ளனர்.

இதுகுறித்து அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வீரமணி கூறியதாவது: தேனி, அல்லிநகரம், சுக்குவாடன்பட்டி, பொம்மையகவுண்டன்பட்டி, ரத்தினம் நகர், அன்னஞ்சி, வடபுதுப்பட்டி உள்ளிட்ட கிராமரங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக மீறுசமுத்திரம், சின்னகுளம், மந்தைகுளம் கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்கள் நிறைந்தால் மட்டுமே இத்தனை கிராமங்களுக்கும் நிலத்தடி நீர் கிடைக்கும். தற்போது நான்கு வழிச்சாலை பணிக்காக கண்மாய்களுக்கு நீர் வரும் பாதைகளை அடைத்து விட்டனர்.

இப்போது தண்ணீர் வராவிட்டால் அடுத்து 12 மாதங்கள் நாங்கள் காத்திருக்க வேண்டும். அதற்குள் தண்ணீர் இல்லாமல் பெரும் பிரச்னை உருவாகி விடும். பல ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களும் வறண்டு விடும். எனவே, இந்த கண்மாய்களுக்கு நீர் வரும் பாதைகளை உடனே திறந்து தண்ணீர் வருவதற்கு தடையற்ற பாதை வசதி செய்த பின்னர், நான்கு வழிச்சாலை பணிகளை அவர்கள் செய்யலாம். இந்த விஷயத்தில் மாவட்ட கலெக்டர் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : Honey. The Water Ponds Stopped In The Water Ponds , Theni ,North East monsoon, water ways,water ponds
× RELATED விடைபெற்றது வடகிழக்கு பருவமழை