×

திருவனந்தபுரத்தில் மாற்றுத்திறனாளி தங்கையை 28 ஆண்டாக தோளில் சுமக்கும் அண்ணன்

*கண்களை ஈரமாக்கும்  சகோதர பாசம்

திருவனந்தபுரம் :  திருவனந்தபுரம் அருகே உள்ள புளியரக்கோணம் பகுதியை சேர்ந்தவர்  ஹரீந்திரன் நாயர். இவரது மனைவி ரமா தேவி. இவர்களுக்கு மனு (32) என்ற மகனும் மீனு (28) என்ற மகளும் உள்ளனர். ஹரீந்திரன் நாயர் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். மனு வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். அவரது தாய் ரமா தேவி அப்பகுதியிலுள்ள கோயில்களில் துப்புரவு பணி செய்து வருகிறார். புளியரக்கோணத்திலுள்ள ஒரே ஒரு அறையுடன் கூடிய வாடகை வீட்டில் தான் இந்த 3 பேரும் வசித்து வருகின்றனர்.

 மீனுவுக்கு பிறவியிலேயே இடுப்புக்கு கீழே உணர்ச்சிகள் கிடையாது. இதனால் அவருக்கு நிற்கவோ, நடக்கவோ முடியாது. போதாக்குறைக்கு இதய வால்வில் கோளாறு, காது சரியாக கேட்காது, அறுவை சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்து என டாக்டர்கள் கூறிவிட்டனர். இதனால் சிறு வயதிலிருந்தே மனு தான் தங்கை மீனுவை தூக்கிக் கொண்டு செல்வார். அது கல்யாண வீடாக இருந்தாலும், மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தாலும் மனு தான் மீனுவை கடந்த 28 வருடங்களாக தோளில் தூக்கி சென்று வருகிறார். மனு 25 வயதை தாண்டிய உடனேயே அவரது உறவினர்களும், நண்பர்களும் திருமண பேச்சை எடுத்தனர். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் தன்னால் திருமணம் செய்ய முடியாது என அவர் உறுதியுடன் கூறிவிட்டார்.

இது குறித்து மனு கூறியது: எனது திருமணத்தை விட எனக்கு மீனு தான் முக்கியம். நானும் எனது அம்மாவும் வேலைக்கு சென்று விட்டால் மீனுவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பெண் கிடைப்பது இந்த காலத்தில் மிகவும் சிரமம். மீனுவை நன்றாக கவனித்துக் கொள்ளும் ஒரு பெண் கிடைத்தால் அப்போது திருமணம் குறித்து யோசிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.ஆனால் இப்போது அவரது எண்ணத்தின்படியே மனுவுக்கு ஒரு பெண் கிடைத்து விட்டார். திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலரான ரம்யா என்பவர் தான் மனுவுக்கு மனைவியாக உள்ளார். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் தான் என்றாலும் இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தங்கைக்காக தனது திருமணத்தை தவிர்க்கும் மனு குறித்து கேள்விப்பட்ட ரம்யா தானாகவே முன்வந்து மனுவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார் என்பது தான் இதில் மேலும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயமாகும்.
ரம்யாவே முன்வந்து திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த போதிலும், மனு முதலில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மீனு கட்டாயப்படுத்தியதால் தான் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு சம்மதித்தார்.
 இவர்களது திருமண நிச்சயதார்த்தம் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு மண்டபத்தில் சமீபத்தில் நடந்தது. தனது நிச்சயதார்த்தத்திற்கு வரும்போதும் கூட மனு தனது உயிருக்கு உயிரான  தங்கையை தோளில் சுமந்து தான் மண்டபத்திற்கு வந்தார். அப்போது யாரோ சிலர் செல்போனில் படம் பிடித்து அதை வாட்ஸ் ஆப் உட்பட சமூக இணையதளங்களில் வெளியிட்டனர்.

இதன் பிறகு தான் மனு மற்றும் மீனுவின் ‘பாசமலர்’ கதை வெளியுலகுக்கு தெரியவந்தது. இப்போது கேரளாவில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மனுவுக்கும், ரம்யாவுக்கும் அடுத்த மாதம் (டிசம்பர்) 12ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. தனது ஆசை அண்ணனின் திருமணத்திற்கு மீனு இப்போதே தயாராகி விட்டார். வீட்டில் வயதுக்கு வந்த தங்கை இருந்தாலும், கவலைப்படாமல் திருமணம் செய்யும் ஆண்கள் இருக்கும் இந்த காலத்தில் இப்படியும் ஒரு அண்ணனா என்று இந்த சம்பவம் குறித்து அறிந்த பலரும் மூக்கின் மேல் விரல் வைத்தபடி கேட்கின்றனர்.

Tags : brother ,sister ,Thiruvananthapuram , Brother Affection, Trivandrum, Brother , sister
× RELATED கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில்...